டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒருநாள் தர்மயுத்தம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஒருநாள் தர்மயுத்தம்!
Published on

கிடுகிடுவென்று ஏறிய ஆம் ஆத்மியின் செல்வாக்கு, தற்போது தள்ளாட்டத்தில் இருக்கிறது. பத்தாண்டுகளாக எந்தவித எதிர்ப்புமின்றி டெல்லியின் நிரந்தர முதல்வராக இருக்கும் அரவிந்த் கேஜ்வரிவால் புகழ், பஞ்சாபிலும் பரவி அங்கேயும் ஆம் ஆத்மி ஆட்சியமைத்திருக்கிறது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. மணீஷ் சிசோடியா, பா.ஜனதாவில் சேர்வதாக ஒப்புக்கொண்டால் நாளையே விடுதலையாகி விடுவார் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கிண்டலடித்திருந்தார். கிண்டல் என்றாலும் அரவிந்த் கேஜ்ரிவால் பதட்டத்தில் இருப்பது என்னவோ உண்மை.

கட்சியின் டெல்லி, பஞ்சாப் வெற்றிகளுக்கு மணிஷ் சிசோடியா முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இந்நிலையில் ஊழல் வழக்கில் அவரை கைது செய்தது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பா.ஜ.கவை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஒத்துழைக்காத நிலையில் ஆம் ஆத்மி தவித்து வருகிறது.

நேற்று ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார். நம்மூரில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சமாதி முன் கண்மூடி அமர்ந்து தியானம் செய்தது, பின்னாளில் தர்மயுத்தமாக வர்ணிக்கப்பட்டது. அப்படியொரு தர்மயுத்தத்தை கேஜ்ரிவால் கையிலெடுத்திருக்கிறார்.

மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களையெல்லாம் சிறையில் அடைக்கும் நாட்டின் பிரதமர், இந்திய நாட்டை சுரண்டி கொழிப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பது கவலை அளிக்கிறது என்றும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

நாட்டின் நலன் குறித்து தான் வேதனையில் இருப்பதாகவும், கவலை தீர்க்க ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய கெஜ்ரிவால் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது குறித்து காங்கிரஸ் இதுவரை கருத்து சொல்லவில்லை. ஆனால், தி.மு.க ஆரம்பம் முதல் தொடர்ந்த கண்டனம் எழுப்பி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து பிரதமருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.

வேறுபட்ட கொள்கைகளும் பல்வேறு அரசியல் கட்சிகளும்தான் இந்திய ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்தது, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் தனிநபர் சுதந்திரத்தை மீறி அவருக்கு வலியையையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது வேதனை அளிப்பதாக தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com