

அமெரிக்க ஈரான் போர் காரணமாக உலகளாவிய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக எரிபொருள் விலை உயர்வு கூறப்படுகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆயினும் இந்தியாவில் மட்டும் இன்னும் எரிபொருளின் விலை அரசினால் உயர்த்தப்படவில்லை. ஆனாலும், ஒரு சில தனியார் விற்பனை நிலையங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியாவிலும் எரிபொருள் விலை உயர்வை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதிக எரிபொருள் வாங்குவதற்கு அன்னிய செலவாணி அதிக அளவில் பயன்படுத்தப்பட வேண்டும் . இது நாட்டின் பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்படுத்தக்கூடும். இந்த சூழ்நிலையில் குடிமக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை கையாள வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் பாரத பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோளைத் தொடர்ந்து நாடு முழுக்க எரிபொருள் சிக்கனத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், சிக்கன நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். மகாராஷ்டிரா அரசு தங்கள் ஊழியர்களை பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அமைச்சர்களை தேவைப்பட்டால் மட்டும் விமான போக்குவரத்தை பயன்படுத்துமாறும் மற்ற நேரங்களில் அவற்றை தவிர்க்குமாறும் வலியுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு மாநிலமும் எரிபொருள் சிக்கன நடவடிக்கையை தொடங்கியுள்ளது, பிரதமர் மோடியும் தனது கான்வாயில் இரண்டு வாகனங்களுடன் மட்டுமே சென்றது பெருமளவில் பேசுபொருளானது. இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா செய்தியாளர் சந்திப்பின்போது
ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின்படி , அரசு வாகன பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் மற்றும் அலுவலக நேரங்களை மாற்றி அமைப்பது தொடர்பான புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது.
டெல்லி மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள்:
1. அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தவரை தங்களது பணிகளை செய்ய வேண்டும்.
2. தனியார் நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
3. அரசு வாகனங்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் குறைத்துக் கொள்ள வேண்டும் .
4. அரசு அதிகாரிகளுக்கான வாகனங்களின் எரிபொருள் வரம்பு 200 லிட்டரில் இருந்து 20% வரை குறைக்கப்படுகிறது.
5. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொது போக்குவரத்துகளை பயன்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும் "மெட்ரோ திங்களாக" நடைமுறைப்படுத்தப்படும். ஊழியர்களுக்கான போக்குவரத்துப் படி 10 சதவீதம் உயர்த்தப்படும்.
6. டெல்லி மாநில அரசு அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த வாகனங்களையும் கொள்முதல் செய்யாது.
7. மாநில அரசின் வேலை நேரம் இனி காலை 10:30 மணி முதல் மாலை 7 மணி வரை இருக்கும். எம்.சி.டி அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
8. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அலுவலக நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
9. டெல்லியில் உள்ள வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தை லாரிகளில் இருந்து ரயில்களுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
10. வாரம் ஒரு நாள் "வாகனம் இல்லா தினத்தை" கடைபிடிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதார நிலையை சீர்குலைக்காமல் பாதுகாக்கவும் அதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லவும், அரசாங்கம் இரண்டு கட்ட விதிகளை தயாரித்துள்ளதாகவும், எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதில் அரசு ஊழியர்களும் பொதுமக்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ரேகா குப்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.