தில்லி கலால் கொள்கை வழக்கு:கெஜ்ரிவாலுக்கு ஐந்தாவது முறையாக சம்மன்!

 Aravind Kejriwal
Aravind Kejriwal
Published on

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் புதன்கிழமை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவருக்கு இது ஐந்தாவது சம்மன். முன்னதாக ஜனவரி 13 ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை ஜனவரி 16 இல் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரியிருந்தது. ஆனால், தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அதை தவிர்த்துவிட்டார்.

இது சட்டவிரோதமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறிவிட்டார். மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து அவரை மக்களவைத் தேர்தலுக்கு பிரசாரம் செய்யாமல் தடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கமாகும். என் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.

அப்படியிருக்கையில் எதற்கு சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு முன் நவம்பர் 2, டிசம்பர் 22 மற்றும் ஜனவரி 3 ஆம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பிய போதிலும்  விசாரணைக்கு ஆஜராவதை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தவிர்த்திருந்தார்.

இந்த சம்மனுக்கு கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததுடன், முதல்வர் சாட்சியாக அழைக்கப்படுகிறாரா? அல்லது சந்தேக நபராக விசாரணைக்கு அழைக்கப்படுகிறாரா? என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறியிருந்தது.இந்த வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்த மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2021-22 ஆம் ஆண்டிற்கான தில்லி அரசாங்கத்தின் கலால் கொள்கை மதுபான வியாபாரிகளுக்கு விற்பனை உரிமம் அளித்தாகவும், சில டீலர்கள்  தங்களுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி மறுத்துள்ளது.

இந்த கொள்கை பின்னர் ரத்துச் செய்யப்பட்டது. எனினும் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த அப்போது தில்லி துணை நிலை ஆளுநராக இருந்த  வி.கே.சக்சேனா பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலவாக்கத்துறை வழக்கு பதிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com