மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!
Published on

கலால் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தில்லி முன்னாள் துணை முதல்வரின் ஜாமீனை நிராகரித்த நீதிபதி தினேஷ்குமார் சர்மா, அவர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானவை. அவரை ஜாமீனில் விட்டால் தனது செல்வாக்கை வைத்து சாட்சிகளை கலைத்துவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கருத இடமிருப்பதால் அவருக்கு ஜாமீன் தரமுடியாது என்று கூறினார்.

தற்போது கைவிடப்பட்ட, தில்லி அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுப்பதில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் புகாரின் பேரில் மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிசோடியா நீதிமன்றம் சென்றார். இந்த ஊழலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவரது ஜாமீன் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த ஊழலில் சிசோடியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு ரூ.100 கோடி வரை முன்பணமாக வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை வளையத்தில் ஆம் ஆத்மி தலைவரும் உள்ளார் என்றும் நீதிமன்றம் கூறியது.

தில்லி கலால் கொள்கை (2021-22) கடந்த 2021 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பின்னர் இதில் ஊழல் நடந்திருப்பதாக தெரியவந்ததை அடுத்து அந்த கொள்கை ரத்து செய்யப்பட்டது. லஞ்சம் கொடுத்த சில விநியோகஸ்தர்களுக்கு இந்த கலால் கொள்கை சாதகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி வலுவாக மறுத்து வந்தது.

கலால் கொள்கையில் மாற்றம் செய்தல், உரிமம் பெற்றவர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்குதல், உரிமக் கட்டணத்தை தள்ளுபடி செய்தல் அல்லது குறைத்தல், அனுமதியின்றி உரிமத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செயல்கள் மூலம் சட்டவிரோத ஆதாயங்கள் பெறப்பட்டதாகவும் இதற்காக கணக்கு புத்தகங்களில் தவறான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

கலால் கொள்கைக்கு வலுசேர்க்க தில்லி சிறுபான்மையினர் கமிஷன் பயிற்சியாளர்களிடம் இருந்து இதற்காக சாதகமான கருத்துக்களை மணீஷ் சிசோடியா பெற்றதாகவும் சிபிஐ துணை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.

கலால் கொள்கையை திருத்தியமைக்க ஒரு நிபுணர்குழுவை தில்லி அரசு ஏற்படுத்தியிருந்தது. அக்குழு தனது பரிந்துரைகளை வழங்கியது. இந்த பரிந்துரைகள் தனக்கு திருப்தி அளிக்காத நிலையில் சிசோடியா, தவான் கமிட்டி அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டு பொதுமக்களின் கருத்தை கேட்குமாறு அப்போது கலால்துறை ஆணையராக இருந்த ராகுல் சிங்கிடம் கேட்டுக்கொண்டார் என்றும் ஏப்ரல் 25 இல் நீதிமன்றத்தில் தாக்க்ல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் கருத்து என்ற பெயரில் தனது யோசனைகளை திணிக்க சிசோடியா நேர்மையற்ற மற்றும் மோசடியான முறையில் செயல்பட்டுள்ளதாகவும் சிபிஐ அதில் குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com