தில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி வரும் 10ம் தேதி தில்லியில், ஆர்ப்பாட்டம் நடத்த கவிதா தயாராகி வருகிறார். இந்த நிலையில் அமலாக்கத்துறை இந்த சம்மனை அனுப்பியுள்ளது. இதற்கிடையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நாளை தனது அமைச்சர்களுடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அமலாக்கத்துறையின் சம்மனுக்கு பதிலளித்துள்ள கவிதா, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில். “மகளிர் இட ஒத்துக்கீடு மசோதா நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. எங்களுடைய ஒரே கோரிக்கை, பெண்கள் அரசியலில் தங்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அதற்காக, பாரத் ஜக்ருதி, எதிர்கட்சியினருடன் இணைந்து, 10-ம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் மெளன விரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமலாக்கத்துறை எனக்கு இந்த சம்மனை அனுப்பி உள்ளது. சட்டத்தை மதிக்கும் பெண்ணாக நான் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இருப்பினும், தர்ணா மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை கவனிக்க வேண்டியது இருப்பதால், விசாரணையில் கலந்து கொள்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிப்பேன். முதல்வர் கேசிஆர் நடத்தும் போராட்டம் மற்றும் மத்திய அரசிற்கு எதிராக எழுப்பி வரும் குரல், பிஆர்எஸ் கட்சியின் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒடுக்க நினைக்கும் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு போதும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை மத்தியில் ஆளும் பாஜகவினருக்கு உணர்த்த விரும்புகிறோம். கேசிஆரின் தலைமையில் பா.ஜ.க.வின் தோல்விகளை அம்பலப்படுத்தி, வளமான இந்தியாவுக்கான எங்களின் போராட்டத்தைத் தொடருவோம்.
மேலும் மக்கள் விரோத ஆட்சிக்கு முன் தெலங்கானா ஒரு போதும் அடிபணியாது என்பதை தில்லியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு நினைவுப்படுத்த நான் விரும்புகிறேன். இவ்வாறு கவிதா தெரிவித்துள்ளார்.