உத்தரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரம் பத்ரிநாத் கோயிலுக்குச் செல்லும் நுழைவுவாயிலாகும். வீடுகள், விடுதிகள், ஹோட்டல்கள் என 4,500 கட்டடங்கள் நகரில் உள்ளன. இங்கு சுமார் 25,000 பேர் வசித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஜோஷிமத் நகரில் உள்ள பல்வேறு வீடுகள், வணிக நிறுவன கட்டடங்களில் மிகப்பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டன.
ஜோஷிமத் நகரம் நிலச்சரிவு, மண்ணில் புதைவது மற்றும் விரிசல் ஆகியவற்றின் அடிப்படையில்
‘அபாயகரமானது’, ‘தாக்குபிடிக்க வல்லது’, ‘பாதுகாப்பானது என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜோஷிமத் நகரில் சேதமடைந்த நிலையில் உள்ள 678 கட்டடங்களை இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜன. 10) தொடங்கியது.
அங்கு மண்ணில் புதையும் நிலையில் உள்ள ஹோட்டல் மலாரி இன் மற்றும் ஹோட்டல் மவுன்ட் வியூ ஆகியவை ரூர்க்கி மத்திய கட்டுமானப் பணிகள் ஆராய்ச்சி நிறுவன நிபுணர்கள் மேற்பார்வையில் இடிக்கப்படுகிறது. இந்த பணியில் தேவைப்பட்டால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உதவிக்கு அழைக்கப் படுவார்கள்.
ஆபத்தான இடங்களில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர். 678 வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அங்கிருந்த 81 குடும்பங்கள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளனர். எனினும் நகர் பகுதியில் 203 அறைகள் வசிப்பதற்கு தகுந்தவை என கண்டறியப் பட்டுள்ளது என்று மாவட்ட வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.
ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பேரிடர் பாதிப்புள்ள இடம் என்று அறிவிக்கப்பட்டு, அங்கு கட்டடங்கள் கட்டுவதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஏறக்குறைய 30 சதவீத இடங்கள் நிலச்சரிவு, விரிசல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு செய்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்தவிதமான அடிப்படை திட்டமும் இல்லாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதே நிலைமை மோசமானதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஜோஷிமத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு கெளச்சால் மற்றும் பிபால்கோடி ஆகிய இடங்களில் மறுவாழ்வு அளிக்கவும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே ஜோஷிமத் நகரை காப்பாற்றும் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்காக சுரங்கங்கள் தோண்டுவது, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது, பாலங்கள் கட்டுவது ஆகியவைதான் தற்போதைய நிலைக்கு காரணம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நிலச்சரிவு, வீடுகள் மண்ணில் புதைவது, விரிசல்கள், மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுவதால் பாதிக்கப்பட்டுள்ள ஜோஷிமத் நகரத்தை தேசிய பேரிடர் பாதிப்பு நகரமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரி சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் எங்களைத் தேடிவர வேண்டியதில்லை. அதற்கென ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. அவர்கள் பிரச்னைக்கு தகுந்த முடிவு எடுப்பார்கள். இந்த மனு குறித்து ஜனவரி 16 இல் விசாரிக்கப்படும் என்று தலைமைநீதிபதி சந்திரசூட் கூறினார்.
இதனிடையே உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் கர்மபிரயாக் என்னுமிடத்தில் சில வீடுகள் நிலத்தில் புதைந்துள்ளதாகவும் மேலும் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் சிதார்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. செளரவ் பகுகுணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் விடியோ காட்சிகள் மூலம் விளக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.