
தமிழகத்தில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை (Dengue outbreak in Tamil Nadu)எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸால் ஏற்படும் கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும். லேசான டெங்கு காய்ச்சல் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலிகள் மற்றும் தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டிருக்கும். கடுமையான டெங்கு காய்ச்சல், டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது, இது கடுமையான இரத்தப்போக்கு, இரத்த அழுத்தத்தில் திடீர் வீழ்ச்சி மற்றும் மரணம் போன்ற அபாயத்தையும் ஏற்படுத்தும்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்குதிசை காற்று மாறுபாடு காரணமாக மழை பெய்தது. இதன்பிறகு காலையில் வெயில் கொளுத்தினால் மாலையில் மழை பெய்கிறது.
இப்படி கிளைமேட் மாறி மாறி வருவதால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் அதிகமாக பரவி வருகிறது.
மேலும் டெங்கு காய்ச்சலால் தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், கோவை, தஞ்சாவூர், தெனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாகவும், ஒரு நாளைக்கு 50 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், டெங்கு பரவலை கட்டுப்படுத்த சில அறிவுறுத்தல்களையும் தமிழக சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து துரிதமாக செயல்பட்டு ATS கொசுக்களை அழிக்கவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ராதிகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.