

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து , சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கு முன்னர் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து 60 ஐ கடந்துள்ளது.பருவமழைக் காலத்தின் தீவிரத்தால், அடுத்து வர உள்ள இரண்டு மாதங்களில் இந்த நோய்த்தொற்று பாதிப்பு மேலும் இருமடங்காக உயரும் என பொது சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
டெங்கு நோய் அறிகுறிகளுடன் வருபவர்களுக்குப் பிரத்யேக சிகிச்சை அளிக்க சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் 71 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் தற்போது 31 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் 30 பேர் டெங்கு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையின் சுற்று பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 30 பேர் வரை அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
ஒரு நாளுக்கு சராசரியாக 60 பேர் வரை டெங்கு அறிகுறிகளுடன்அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை மாநகராட்சியில் அண்ணா நகர், அம்பத்தூர், அடையாறு ,கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, பெருங்குடி, ராயபுரம் போன்ற பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகம் உள்ளது.
சென்னை மாநகராட்சியின் தடுப்பு முயற்சிகள்:
சென்னை மாநகராட்சி நோய் தடுப்பு முறைகளை முன் கூட்டியே செயல்படுத்துவதன் மூலம் டெங்கு பாதிப்பை வெகுவாக குறைக்கலாம் என்று எண்ணுகிறது. மழைக்கால நோய்த் தடுப்புப் பணிகளைச் மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அங்காங்கே தேங்கிய நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. சாலைகளில் இரு ஓரங்கள் மற்றும் புதர் போன்ற பகுதிகளில் கொசுக்களை அழிக்க தினமும் கொசு மருந்து அடைக்கப்பட்டு வருகிறது. வீடுகளின் அருகில் கொசு பரவுவதற்கான வாய்ப்பு உள்ள பொருட்கள் அப்புறப்படுத்த படுகிறது. குப்பை தொட்டிகள் , குழிகள் போன்ற இடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியைத் தடுக்க மக்களும் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும். வீடுகளின் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் கவனமாக இருக்க வேண்டும். தேங்கிய நீரில் கொசு மருந்து தெளிப்பான்கள் தெளிக்க வேண்டும். வீட்டின் அருகே உள்ள குப்பை தொட்டிகள் தினமும் சுத்தம் செய்யப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
தங்கள் வீடுகளைச் சுற்றியுள்ள தேவையில்லாத பொருட்களை அகற்றுவது அவசியம். மொட்டை மாடிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்வது போன்ற நடவடிக்கைகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.நவம்பர், டிசம்பரில் நோய் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதால் பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறார்கள்.