இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களால் ஏற்படும் நிதிச் சிக்கல்களால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். பெரும்பாலான காப்பீட்டு நிறுவனங்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆகும் முழுச் செலவையும் ஏற்க மறுப்பதே இந்தச் சிக்கலுக்கு முக்கிய காரணம். உயிருள்ள ஒருவரின் உறுப்பை தானமாகப் பெறும் அறுவை சிகிச்சைக்கு, உறுப்பு தானம் செய்பவருக்கு ஆகும் மருத்துவச் செலவுகளையும் காப்பீடு நிறுவனங்கள் ஏற்க மறுப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டிய நோயெதிர்ப்பு மருந்துகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால், பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் இந்த மருந்துகளுக்கான செலவுகள் சேர்க்கப்படுவதில்லை.
இதனால், நோயாளிகள் லட்சக்கணக்கில் சொந்தப் பணத்தைச் செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். மேலும், ஏற்கெனவே உள்ள உடல்நலப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி வழங்குவதையே மறுத்துவிடுகின்றன. இது நோயாளிகளின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கிறது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மற்றும் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற அரசுத் திட்டங்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு ஓரளவு நிதி உதவியை வழங்கினாலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய செலவுகள் மற்றும் மற்ற துணைச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மொத்தச் செலவு ₹20 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.
தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ஹெச்.எஸ். நாகராஜா ராவ் கூறுகையில், “ஒருவருக்கு ஏற்கனவே பாலிசி இருந்து, அறுவை சிகிச்சை செய்திருந்தால், காப்பீடு நிறுவனம் அதை புதுப்பிக்க மறுக்க முடியாது.” என்றார். ஆனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் முறையாகப் பாலிசி எடுக்க முயற்சிக்கும் பலருக்கு இது பொருந்தாது. அவர்களுக்குக் காப்பீடு பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.
காப்பீட்டு நிறுவனங்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களை அதிக ஆபத்துள்ளவர்களாகவே கருதுகின்றன. இந்த முடிவுகள் நிறுவனங்களின் விருப்பப்படி எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
"உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, உறுப்பு தானம் செய்தவர்களுக்கும் மருத்துவச் செலவுகளுக்கான காப்பீடு கிடைப்பதில்லை" என ஆய்வாளர் டாக்டர் எலிசபெத் ஆபிரகாம் தெரிவித்தார். இந்தச் சிக்கலைக் களைய அரசு ஆதரவு மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிகளின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய, காப்பீட்டுத் துறையில் சில சீர்திருத்தங்கள் தேவை என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர். உறுப்பு தானம் செய்பவரின் மருத்துவச் செலவுகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் மருந்துகளுக்கான செலவுகள் ஆகியவற்றை காப்பீட்டுத் திட்டங்களில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.