சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதியிடம் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தும் பணிகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், ‘நேற்று இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் அடுத்த வாரத்திலும் மீண்டும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து நிறைய அதிகாரிகள் வர இருக்கிறார்கள். இந்த வருகையின்போது, தமிழகத்தில் உள்ள வசதிகளை எல்லாம் அவர்கள் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதற்காக தமிழக அரசு தயாராகிக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு முதல் முறையாக இந்த வாய்ப்பை வழங்கிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்தப் போட்டியை அனைவரும் வியக்கும்படி நடத்திக் காட்டுவோம் என்று அவர்களிடம் கூறி இருக்கிறோம். எப்படி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தினோமோ அதேபோல், ஆசிய ஹாக்கிப் போட்டிகளையும், கேலோ இந்தியா போட்டிகளையும் நடத்திக்காட்டுவோம் என்று நம்புகிறேன்’ என்று அமைச்சர் கூறினார்.
அதையடுத்து, ‘இந்தப் போட்டிகளைக் காண பிரதமர் வருகை தருகிறாரா?‘ என்று கேட்டபோது, ‘இதற்கு முன்பு நடைபெற்ற கேலோ இந்தியா போட்டிகளின் தொடக்க விழா அல்லது நிறைவு விழா நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்து கொண்டு இருக்கிறார். பிரதமருக்கு நிச்சயம் அழைப்பு விடுக்கப்படும்‘ என்று பதிலளித்தார்.
மேலும், கேலோ போட்டிகள் நடத்தப்படும் இடங்கள் குறித்து அமைச்சரிடம் கேட்டபோது, ‘இந்தப் போட்டிகளை சென்னையில் மட்டும் நடத்தலாமா அல்லது கோவை, மதுரை உள்ளிட்ட மூன்று அல்லது நான்கு இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து நேற்றுதான் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது. அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின்போது இதுகுறித்து முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, ‘அமைச்சர் உதயநிதி, துணை முதல்வர் ஆகப்போவதாகத் தகவல்கள் பரவி வருகிறதே, அது குறித்து…’ என்ற கேள்விக்கு, ‘யார் சொன்னது? எங்கிருந்து தகவல் பரவியது? எனக்கு வராத தகவல் உங்களுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லையே. அப்படியொரு தகவலே தவறானது. அதுபோன்ற தகவல் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எதை வைத்து நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.