பாயாவுக்கு ஆசைப்பட்டு பாழாய்போன காவலர்கள்!

பாயாவுக்கு ஆசைப்பட்டு பாழாய்போன காவலர்கள்!

சென்னை, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கோட்டமுத்து, தனசேகர். இவர்களுடன் இன்னும் மூன்று காவலர்கள் ஓரிரு தினங்களுக்கு முன் திருவொற்றியூர் கணக்கர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு சாப்பிடச் சென்றனர். இந்த ஓட்டலில் பரோட்டாவும், பாயாவும் பிரபலம் என்பதால் எப்போதும் ஓட்டலில் கூட்டம் அலைமோதும். அன்றும் ஓட்டலில் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். சாப்பிடச் சென்ற காவலர்களும் பரோட்டாவை ஆர்டர் செய்துள்ளனர். சற்று நேரத்தில் பரோட்டாவும் பாயாவும் அவர்களுக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர்கள் பாயா கேட்டிருக்கிறார்கள்.

ஓட்டலில் கூட்டம் அதிகம் இருந்ததால் இரண்டாவது முறை பாயா வருவதற்கு சற்று நேரமாகி உள்ளது. இதனால் கடுப்பாகிப்போன காவலர்கள், ‘பாயாவுக்கு எவ்வளவு நேரம் காத்திருப்பது?’ எனக்கேட்டு தடித்த வார்த்தைகள் சிலவற்றைப் பயன்படுத்தி உள்ளன. இதைக் கேட்ட சக ஊழியர்கள் சிலர் இப்படி பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். அதைக்கேட்டு அந்தக் காவலர்களுக்குக் கோபம் தலைக்கேறிவிட, ஓட்டல் பணியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அதோடு, பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களையும் அவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இந்த பிரச்னை சுமார் முப்பது நிமிடங்கள் நடந்துள்ளது. சற்று நேரத்தில் அந்தக் காவலர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

நடந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்தக் காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் அந்தக் காவலர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் ஓட்டல் உரிமையாளர். அதோடு அந்த சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாக்களிலும் வேகமாகப் பரவியது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கத் தொடங்கிய காவல்துறை அதிகாரிகள் திருவொற்றியூர் காவலர்கள் கோட்டமுத்து மற்றும் தனசேகர் உள்ளிட்ட ஐந்து காவலர்கள் ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதோடு, இவர்கள் சம்பவத்தின்போது மது போதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவலர்கள் கோட்டமுத்து மற்றும் தனசேகர் இருவரையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மற்ற காலவர்கள் மூன்று பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட இரண்டு காவலர்களும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடி போதையில் பாயாவுக்கு ஆசைப்பட்டு பணி நீக்கம் வரை சென்று பாழாய்ப் போன காவலர்களின் சிறப்புச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com