

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவிருக்கும் தொடர் திருவிழாக்கள் மற்றும் சமய நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பாரம்பரிய சமய நிகழ்வுகளை சுமூகமாக நடத்துவதற்கும், இந்த விசேஷ நாள்களில் வருகை தரும் பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருசில நேரங்களில் பக்தர்கள் 3 நாட்கள் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் பக்தர்களுக்காக தேவஸ்தானம் சார்பில் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளதால் ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் குறிப்பிட்ட சில தேதிகளில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் வரை முக்கிய விழாக்கள் நடைபெறுவது குறித்த விவரங்களை கோவில் நிர்வாம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 14-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 17-ந்தேதி ஆனிவார ஆஸ்தானமும், 19-ம்தேதி ஆண்டவன் ஆசிரம சுவாமிகளுக்கு பெரிய மரியாதை நிகழ்வும் நடக்கிறது.
இதன் காரணமாக, இரண்டு நாள்களுக்கு மிக முக்கிய பிரமுகர்கள் தவிர மற்றவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17ஆம் தேதி ஆணிவார ஆஸ்தான நாள் அன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் நடைபெறாது என்றும் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜூலை 29-ந்தேதி திருமலை ஜீயர் சுவாமிகளின் சதுர்மாச்ய சங்கல்பம் நடக்கிறது.
ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதி பவித்ரோத்சவ அங்குரார்ப்பணமும், 24-ந்தேதி பவித்ர சமர்ப்பணமும் நடக்கிறது. இதன் காரணமாக, இரண்டு நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படும்.
செப்டம்பர் மாதம் 8-ந்தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனமும், 14-ந்தேதி ஸ்ரீவாரி பிரம்மோற்சவ அங்குரார்ப்பணமும், 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ஸ்ரீவாரி பிரம்மோற்சவமும் நடக்கிறது.
மேற்கண்ட நாள்களில் விஐபி பிரேக் தரிசனங்களுக்கான பரிந்துரைக் கடிதங்கள் தொடர்பான விதிமுறைகளையும் தேவஸ்தான நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, மேற்கண்ட நாட்களுக்கு முந்தைய நாளில் மிக முக்கிய பிரமுகர்கள் தவிர, விஐபி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இந்த நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
எனவே திருமலைக்கு தரிசனத்திற்கு திட்டமிடும் பக்தர்கள் மேற்கண்ட கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.