ஆசியாவிலேயே அதிக குடிசைகள் கொண்ட பகுதியான தாராவியில் 30 ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட குடிசை மேம்பட்டுத் திட்டம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இதற்காக அதானி நிறுவனத்திடம் மகராஷ்டிரா அரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணிகளை நிறைவேற்றும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
600 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான, தாராவியை மேம்படுத்தும் திட்டம் பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தது. இதை கதைக்களமாக கொண்ட ஐந்தாண்டுகளுக்கு முன் உருவான சூப்பர் ஸ்டாரின் காலா திரைப்படம் பெரிய அளவில் கவனம் பெற்றது. தாராவிக்கும் தமிழர்களுக்கும் நூற்றாண்டு கால தொடர்பு உண்டு. நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்த மும்பைக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் நிறைய பேர். தாராவி மறு சீரமைப்பால் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.
தாராவி மக்களுக்கு அடுக்கு மாடி வீடுகள் கட்டி தரப்பட்டாலும், மறுசீரமைப்பு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்கிறார்கள். மும்பையின் எளிய மக்களுக்கான உணவு, இங்குதான் தயாராகிறது. தோல், கவரிங் நகை தயாரிப்புகளும் தாராவியில்தான் நடைபெறுகின்றன.
கடந்த பா.ஜ.க - சிவசேனா ஆட்சியில் தாராவி மேம்பாட்டு திட்டம் துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் சென்ற ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இதில் தென்கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் அதானி குழுமத்திற்கே டெண்டர் கிடைத்தததாக சொல்லப்பட்டது.
259 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தாராவி குடிசை மேம்பாட்டு திட்டமானது 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாகியிருக்கிறது. இந்த திட்டத்திற்கு அதானி நிறுவனம், 5,069 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. இந்த திட்டப்பணிகளை தொடங்குவதற்கு அதானி குழுமத்திற்கு அரசு இறுதி ஒப்புதல் தந்திருக்கிறது.
தாராவியில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது இன்று வரை கணிக்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். தாராவியை மறு சீரமைக்க விரும்பினால் புதிதாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள். 50 ஆயிரம் குடிசைகள் இருக்கலாம் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாநில அரசு எண்ணிக்கையை குறைவாக அறிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. தாராவி மறுசீரமைப்பு என்பது எளிதான காரியமல்ல என்பதை மகராஷ்டிரா அரசு நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறது.