

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் புகழ்பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலின் தூய்மை பணியாளர் சின்னய்யா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன்படி 1995ம் ஆண்டு முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமியர்கள் கொல்லப்பட்டு இங்கு புதைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். கொலையாளிகளின் மிரட்டலுக்கு பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும் புகாரில் கூறியிருந்தார்.
இதையடுத்து தேசிய கவனம் பெற்ற இந்த வழக்கு தொடர்பாக மாநில அரசு , சிறப்பு புலனாய்வு குழுவை(SIT) அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. புலனாய்வு குழுவின் விசாரணையின்படி, சின்னையா அடையாளம் காட்டிய பல இடங்களில் தடயவியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.இந்த ஆய்வின் முடிவில் சின்னையா கூறிய புகாரின் படி எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பொய் புகார் கூறிய வழக்கில் சின்னையா கடந்த ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 11 ஆம் தேதி ரீட் மனு ஒன்றை சின்னையா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் சின்னையா தான் ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். தர்மஸ்தலாவின் பரம்பரை அறங்காவலரான வீரேந்திர ஹெக்டேவின் புகழை கெடுக்கும் வகையில் ஒரு பெரிய நிழல் கூட்டணி தன்னை இதில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.
வீரேந்திர ஹெக்டே யார்?வீரேந்திர ஹெக்டே தக்ஷனா கன்னட மாவட்டத்தின் மிகவும் பிரபலமான மனிதர். இவர் ஏராளமான சமூக சேவைகள் மற்றும் ஆன்மீகப் பணிகளை செய்து தேசிய அளவில் கவனம் பெற்றவர். ஆன்மீகம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச தங்கும் விடுதி, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக செயல்பட்டு மாநில மற்றும் தேசிய அளவில் அரசாங்கத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். கர்நாடக மாநில அரசு அவருக்கு கன்னட ரத்னா என்ற உயரிய விருதையும், மத்திய அரசாங்கம் அவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய உயரிய குடிமை விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
தர்மஸ்தலா மற்றும் ஹெக்டேவிற்கு எதிராக வதந்திகளை பரப்ப , மகேஷ் ஷெட்டி திமரோடி, விட்டல் கௌடா உள்ளிட்ட சிலர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக தெரிவித்தார். இவ்வாறு செய்வதாக இருந்தால் சின்னையாவுக்கு 50 லட்ச ரூபாய் பணம், வீடு கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாய் பணமும் தருவதாக உறுதி கொடுத்ததாக தெரிவித்தார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 200 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரகாஷ் ராஜ் பெயர் அடிபடுவது எதனால்?
சின்னையா காவல்துறை விசாரணையின் பொழுது கேரளாவில் சொகுசு விடுதியில் தங்கி இருந்த போது , அவருடன் தங்கி இருந்தவர்கள் ஒரு நபரிடம் தமிழில் பேசியுள்ளனர். அந்த நபர் பிரகாஷ்ராஜ் என்றும் " நான் ஜூன் 29ஆம் தேதி நேரில் வந்து உங்களை கட்டிப் பிடித்துக் கொள்கிறேன்" என்று ஆறுதல் கூறியதாகவும் சின்னையா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரச்சனை உடனடியாக விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து , நடிகர் பிரகாஷ்ராஜ் தனது X தளத்தில் "இது கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை சம்பந்தமான உணர்வுபூர்வமான விஷயம். நான் தற்போது வெளியூரில் இருப்பதால் இன்னும் இரண்டு தினங்களில் நேரில் வந்து எனது நிலைப்பாட்டை விளக்குவேன். அதுவரை விஷமிகள் பரப்பும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று கன்னடத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
ஜூன் 29 ஆம் தேதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரிய அளவில் பரப்பரப்பை கிளப்பி வருகிறது.