‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை‘ தொடக்க விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை இலச்சினை வெளியிட்டு விழா சென்னை லீலா பேலஸில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், கிரிக்கெட் வீரர் தோனி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை இலச்சினையை வெளியிட்ட தோனி, அதன் இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து முதலமைச்சர் கோப்பைக்கான கருப்பொருள் பாடலை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் உள்ள அனைவரையும் போல நானும் எம்.எஸ்.தோனியின் ரசிகன்தான். அண்மையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு இரண்டு முறை ஐபிஎல் பார்க்கச் சென்றிருந்தேன். தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம். தமிழ்நாடு தத்தெடுத்துக்கொண்ட மகன் தோனி சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாட வேண்டும். சென்னையின் செல்லப்பிள்ளை தோனி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்த தோனி அவரது கடுமையான உழைப்பினால் தேசிய ஐகானாக மாறி இருக்கிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுகளிலும் தமிழ்நாட்டிலிருந்து நிறைய தோனிகளை உருவாக்க விரும்புகிறோம். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டுத் துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரமாண்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் அடைந்திருக்கிறது. அமைச்சர் உதயநிதி பொறுப்பில் விளையாட்டு துறை மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் உதயநிதி ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவார் என உங்களைப்போல நானும் நம்புகிறேன். நாள்தோறும் ஒரு பணி விளையாட்டுத் துறையில் நடந்துகொண்டே இருக்கிறது. இது விளையாட்டுத் துறைதான் என நினைக்காமல், இந்தத் துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியனாக்கி கொண்டிருக்கிறார் உதயநிதி. அவருக்கு எனது பாராட்டுகள்” என்று பேசினார்.