சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த தினம் ஏப்ரல் - 20.

சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த தினம் ஏப்ரல் - 20.
Published on

ர்வாதிகாரி எனும் இந்த வார்த்தை இவருக்காகவே இருக்கிறது. சர்வாதிகாரத்திலும் உயிர்களை சித்ரவதை செய்வதிலும் இவரை மிஞ்சும் ஆள் இதுவரை உலகத்தில் இல்லை எனலாம். ஒற்றை ஆளாய் அகிலத்தை தன் கொடுமையான செயல்களால் ஆட்டிப் படைத்த கொடுங்கோலன் இவர்.  

  
      1889 ஏப்ரல் 20 ஆம் தேதி ஆஸ்திரியாவின் ஹங்கேரியில் அலாய்ஸ் இட்லர் என்பவரின் மூன்றாவது மனைவி கிளாரா போல்ஸ்க்கு நான்காவதாக பிறந்தவர் ஹிட்லர். . இவருடன் பிறந்த உடன் பிறப்புகள் இறந்து விட இவரும் இவருடன் பிறந்த தங்கையான பவுலா ஹிட்லர் மட்டுமே உயிருடன் மிஞ்சினர். 

    அடால்ப் என்பது உயர்குணமுள்ள ஓநாய் என்பதைக் குறிக்கும் பழமையான ஜெர்மானியரின் சொல் இது .. “ஓநாய் என்ற பெயரில் விருப்பம் கொண்ட ஹிட்லர் இந்தப் பெயரை தன் புனைபெயராக வைத்து அதன் மூலமே அறியப்பட்டார் .ஹிட்லர் எனபதற்கு மேய்ப்பாளர் அல்லது காப்பாளர் என்று பொருள். இதனால்தான் ஒருவேளை இந்த உலகத்தைக் காக்கும் காப்பாளர் என்ற மமதை வந்திருக்குமோ?  

       இவரின் இளமைக்காலத்தில் தந்தையின் கொடுமைகளுக்கு தாயுடன் தங்கையும் தானும் ஆளானதாக தன்னுடைய “மெயின் கேம்ப் எனும் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். தந்தையின் கண்டிப்பால் அவரை வெறுத்து தாயின் மீது அதிகப் பிரியத்துடன் இருந்த ஹிட்லருக்கு தாயின் செல்லமும் அதிகம். துவக்கத்தில் ஹிட்லரும் படிப்பில் திறமையான வராக இருந்தவர்தான் ஆனால் 1903 ஆம் ஆண்டு தந்தை மறைவுக்குப் பின் கொஞ்சமும் கண்டிப்பு இல்லாமல் படிப்பில் பின் தங்கினார். தாயின் அதீத செல்லத்தில் கடுமையான முரடனாக மாறிய ஹிட்லருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தன் 16 வயதிலேயே படிப்பை பாதியில் விட்டதாக பதிவுகள் சொல்கிறது.. ஹிட்லர் தன் தாய் தங்கையுடன் 1905 ஆம் ஆண்டு முதல் நாடோடியாக வியன்னாவில் வறுமையுடன் வாழ்ந்து வசித்துள்ளார்.

      தாய்க்கு கிடைத்த ஆதரவற்றோர் உதவித்தொகை மட்டுமே அவர்களின் பசியை ஆற்றியுள்ளது. இடையில் சிறந்த ஓவியரான இவரை ஓவியராகும் தகுதி இல்லையென வியன்னாவின் அகாடமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் இரு முறை நிராகரித்துள்ளது. வியன்னாவில் இவர் மட்டுமே யூதஎதிரியாக இருந்ததாக அவரின் சிறுவயது நண்பரான அகஸ்ட் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். வியன்னாவில் நடைபெறும் வகுப்பு வாதக் கலவரங்களைப் பார்த்தவர். யூதர்கள் மீதான வெறுப்பில் மார்ட்டின்லூதரின் யூத எதிர்ப்பு நூல்கள் படிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார்.

      1909 ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோயால் மறைந்த தாயின் மறைவுக்குப் பின் தான் வரைந்த ஓவியங்களை விற்று  அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாழ்ந்த ஹிட்லருக்கு நாளிதழ்கள் படிப்பதன் மூலம் அரசியல் ஈடுபாடு வந்தது. அரசியலில் நுழையும் பொருட்டு ஹிட்லர் தனது 25 வது வயதில் முதல் உலகப்போர் துவங்கிய சமயத்தில் ஜெர்மனிக்கு வந்து ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார். அந்த நேரத்தில் நடந்த முதல் உலகப்போரில் ஜெர்மனி சரண் அடைந்தது. இதை அறிந்த ஹிட்லர் சினத்துடன் கொந்தளித்தார். ஜெர்மனியின் தோல்விக்கு கம்யூனிஸ்டுகளும் யூதர்களும்தான் காரணம் என்று கருதி அவர்களை அழிக்கத் திட்டமிட்டார்.  

      அதற்கு கட்சியில் இணைந்து அதிகாரம் பெறுவதுதான் சரியான வழி என்ற திட்டத்துடன் அந்த நாட்டின் முக்கியக் கட்சியான நாஜி கட்சியில் சேர்ந்து படிப்படியாக அதன் தலைவராக உருவெடுத்து ஜெர்மன் அரசுக்கு எதிராக மக்களை திரட்டி ஆட்சியை கைப்பற்ற முயன்றார். மக்களும் இவருக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் புரட்சிக்காக சிறையில் அடைக்கப்பட்ட அவர் அங்குதான் தனது சுயசரிதையான “மெயின் கேம்ப்” என்ற புத்தகத்தை எழுதினார்.

      ஜனாதிபதி தேர்தலில் மூத்த தலைவரான ஹிண்டன்பெர்க் என்பவர் ஆட்சி அமைக்க நாஜிக் கட்சியின் ஆதரவும் தேவைப்பட்டதால் கூட்டணி அமைத்தார். அதையடுத்து 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ஹிட்லர் ஜெர்மனியின் பிரதமர் ஆனார். தொடர்ந்து ஒரு வருடத்தில் ஹிண்டன்பெர்க் மரணம் அடைந்ததும் ஜனாதிபதி பதவியையும் அடைந்தார். பதவியேற்றதும் தனக்கு கீழ் எல்லா வற்றையும் கொண்டு வந்தார். முதலில் அரசியல் கட்சிகளை தடை செய்தார். பின்  நாடாளுமன்றத்தை கலைத்தார். மேலும் தான் எதிரிகளாக நினைத்த யூதர்களை கைது செய்து சிறையில் அடைத்து பட்டினி போட்டு சித்திரவதை செய்தார். சற்றும் இரக்கமின்றி ஒரு இருட்டறையில் அடைத்து வைத்து விஷ வாயுவை இட்டு அவர்களை மரணமடைய வைத்தது உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியது. ஹிட்லர் மீதான பிம்பம் எளிதாக சர்வாதிகாரியாக கட்டமைக்கப்பட்டது.

      தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் துவங்கி ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஆகியவை கைகோர்த்துக்கொண்டு போலந்து, பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக செயல்பட்டன. ஒரு கட்டத்தில் ரஷ்ய படைகள் ஜெர்மனியை சூழ்ந்ததால் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி கொடுங்கோலன் ஹிட்லரின் வாழ்க்கைக்கு  முடிவு வந்தது. தப்பிக்க முடியாமல் மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்த ஹிட்லரும் அவர் மனைவி ஈவாவும் எதிரிகள் கையில் மட்டும் சாகக்கூடாது என்று  துப்பாக்கியால் சுட்டும்  சயனை அருந்தியும்  தற்கொலை செய்து கொண்டனர்.

       எவ்வளவு திறமைகள் இருந்தாலும் பெற்றோரால் பாதிக்கப்படும் சிறு வயதின் தாக்கங்களும் பேராசையும், நான் எனும் அகங்காரமும்  வாழ்க்கையின் பாதையை தீமையின் பக்கம் மடைமாற்றி விடும் என்பதற்கு ஹிட்லரின் வாழக்கை சான்று.

  உலகத்தையே அச்சத்துடன் திரும்பிப் பார்க்க வைத்த ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் கதை முடிவுக்கு வந்தாலும் அவர் விட்டுச்சென்ற கொடுமையான வரலாறுகள் மக்கள் மனதில் இன்னும் வடுக்களாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com