

தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் பேசியுள்ளார்.
காவல்துறை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக போதைப் பொருள்களுக்கு எதிராக மாணவர்கள் இளைஞர்களிடம் கையெழுத்துப் பெறுவதும், உறுதிமொழி ஏற்கச் செய்யும் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது, போதைப்பொருள் மாநிலத்தினுடைய வளர்ச்சியை பாதிக்கிறது. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் தான் சார்ந்து இருக்கக்கூடிய சமூகத்திற்கே சுமையாக மாறுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் போதைப் பொருள் உட்கொண்டவர்களாக இருக்கின்றனர். போதைப் பொருள் பயன்படுத்துபவர்களால் தனி நபர்களுக்கு மட்டும் அல்லாது சமூகமே பாதிக்கப்படுகிறது.
போதைப் பொருள் விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களும், இளைஞர்களும் போதைப் பொருள் பயன்படுத்துவதால் அவருடைய எதிர்காலமே இழக்க கூடிய அபாயம் உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருளை ஒழிப்பதற்காக சர்வாதிகாரியாகவும் செயல்படுவேன்.போதை இல்லாத தமிழகத்தை அமைப்பதே தமிழக அரசின் உடைய உறுதியாகும். மேலும் தற்போது வரை 16 ஆயிரம் கிலோ கஞ்சாவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.