‘எனக்கா ஓட்டு போட்ட?‘ ஆத்திரத்தில் அமைச்சர் பொன்முடி!

‘எனக்கா ஓட்டு போட்ட?‘ ஆத்திரத்தில் அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி விஷ சாராயம் அருந்தி சிலர் இறந்துள்ளனர். பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் பகுதியிலும் இதேபோன்று விஷ சாராயம் அருந்தியதில் இறப்பும் உடல் நலக்குறைவும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த இருவேறு சம்பவங்களிலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணமாக அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரண நிதியை வழங்குவதற்காக அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் எக்கியார்குப்பத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்கினர்.

அதன்பின் அங்கிருந்து திரும்ப அமைச்சர்கள் காரில் ஏறியபோது, பொதுமக்கள் அமைச்சர் பொன்முடியிடம், ‘மரக்காணத்தில் மக்கள் சிகிச்சை பெற நல்ல ஒரு மருத்துவமனை இல்லை‘ என்று கூறினர். அதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக இளைஞர் ஒருவர் அமைச்சரிடம் கூறினார். அதைக் கேட்டு கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி அந்த இளைஞரிடம், ‘எனக்கா ஓட்டு போட்ட?‘ என்று கேட்டபடி காரில் சென்று விட்டார்.

அதைக் கேட்ட பொதுமக்கள், ‘ஓட்டு போட்டால்தான் அரசாங்கம் எதையும் செய்ய வேண்டும் என்று இல்லை’ என்று பதில் அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. விழுப்புரம் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் வெற்றி பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டும் விதமாகவே அமைச்சர் பொன்முடி இப்படிப் பேசி இருக்கிறார் என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு கூட பொன்முடி இதுபோன்ற  சில சர்ச்சை பேச்சுகளில் சிக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com