
குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகில் எல்லிஸ்பிரிட்ஜ் பகுதியில் வசிப்பவர் பூஷண் மேத்தா. இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பைக்கில் ஒரு கடைக்குச் சென்று லஸ்ஸி குடித்திருக்கிறார். திரும்பி வந்து பார்த்தபோது, கடைக்கு முன் விடப்பட்டிருந்த அவரது பைக் காணவில்லை. உடனே கடைக்காரரிடம் தனது பைக் காணவில்லை என்று கூற, கடைக்காரர் தனது கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்.
அந்தக் கேமரா பதிவில் மேத்தாவின் பைக்கை ஒருவர் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. அதையடுத்து, அவர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி தனது பைக்கின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, அதைக் கண்டுபிடித்துத் தரும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் மேத்தாவை செல்போனில் அழைத்த ஒரு நபர், தன்னை ஒரு வழக்கறிஞர் எனவும், தனது நண்பர் ஒருவர்தான் குடிபோதையில் மேத்தாவின் பைக்கை தவறுதலாக மாற்றி எடுத்துச் சென்று விட்டார் எனவும் தெரிவித்து இருக்கிறார். பைக்கை எடுத்துச் சென்ற நபர் இந்தத் தகவலை முதலில் தனது மனைவியிடம் கூறினார் எனவும், அதைத் தொடர்ந்து அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அவரிடம் விசாரித்ததால் தன்னிடம் உதவிக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
அதைக்கேட்ட மேத்தா, ‘இந்த விஷயத்தை நாமே பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால், வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்று விட்டதால் அதை ரத்து செய்து திரும்பப் பெறுவதற்கு கொஞ்சம் கால அவகாசம் பிடிக்கும். அதுவரை எனது பைக்கை தவறுதலாக எடுத்துச் சென்றவர், இந்த வழக்கு முடிந்து பைக் எனது கைக்கு கிடைக்கும் வரை தினமும் அதை நன்கு துடைத்து சுத்தம் செய்து அந்தப் போட்டோவை எனக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவருக்கு புத்தி வரும். மீண்டும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டார்’ என்று கூறி இருக்கிறார் மேத்தா.
மது போதையில் தனது வண்டி எது என்று கூடத் தெரியாமல் எடுத்துச் சென்ற அந்த நபர் தினமும் மேத்தாவின் வண்டியை துடைத்து சுத்தம் செய்து அந்தப் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் மூலம் தினமும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு விநோத தண்டனை பெற்ற குடிமகனின் தண்டனை சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்துகொண்டிருக்கிறது.