பிரிட்டன் பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் மறுசீரமைப்புத் திட்டம் தாமதமானால், 147 ஆண்டுகள் பழமையான அந்த வளாகம் இடிந்து விழுந்து பேரழிவு ஏற்படலாம் என்று அந்நாட்டின் பாராளுமன்ற குழு எச்சரித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை இங்கிலாந்தின் மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் நகரில் தேம்ஸ் நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ளது
கட்டிடக் கலையில் சிறந்த படைப்பாக கருதப்படும் இந்த வெஸ்ட் மின்ஸ்டர் அரண்மனையானது, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகிறது. பாராளுமன்றம் செயல்படக்கூடிய இந்த கட்டிடம், மிகவும் சிதிலமடைந்து கல்நார் படிந்துள்ளதால் இப்போது ஆபத்தில் உள்ளதாகவும், கட்டிடத்தில் பல ஆபத்துகள் இருப்பதாகவும் பாராளுமன்ற குழு கூறி உள்ளது.
பாராளுமன்றம் இருக்கும் அரண்மனையைச் சீரமைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் என்னென்ன சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கவில்லை. பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் செலவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேலும் தாமதம் செய்தால் செலவு அதிகமாகும். அது வரி செலுத்துவோருக்கே கூடுதல் சுமையாகும் என தெரிவிக்க படுகிறது.
இதுபற்றி பிரிட்டன் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையைச் சரிசெய்து மீட்டெடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்து நிலவினாலும், பல்வேறு காரணங்களால் சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றுவரை, கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களைவிட பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே கவனம் செலுத்தப்படுகிறது.
அரண்மனையில் சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளுக்காக பிரிட்டன் பாராளுமன்றம் ஒரு வாரத்திற்கு 2 மில்லியன் பவுண்டுகள் (ரூ. 20,56,92,200) செலவு செய்கிறது. ஆனாலும், சுகாதாரம், பாதுகாப்பு பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த பிரச்சினையில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.