ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்களை தண்டிக்க நேரடி சாட்சியங்கள் தேவையில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அரசு ஊழியர்களை தண்டிக்க நேரடி சாட்சியங்கள் தேவையில்லை. இதர சாட்சியங்கள் அல்லது சந்தர்ப்ப சாட்சியங்களே போதுமானது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது.

நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. அரசு நிர்வாகம் ஊழலிலிருந்து விடுபட வேண்டும் என்றால் ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது விரைந்து விசாரணை நடத்தி தண்டனையை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அரசு ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் கடந்த மாதம் முடிவுற்றது. ஆனால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வெள்ளிக்கிழமை (16/12/2022)வழங்கப்பட்டது.

நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு பின்வருமாறு தீர்ப்பளித்திருக்கிறது.

அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குக்களில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என கேட்டால் நேரடி சாட்சியங்கள் கிடைக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இவர்கள் மீதான வழக்கை விசாரித்து தண்டனை வழங்க நேரடி சாட்சியங்கள் தேவையில்லை. இதர சாட்சியங்கள் அல்லது சந்தர்ப்ப சாட்சியங்கள் இருந்தாலே நடவடிக்கை எடுக்க போதுமானது.

புகார் கொடுத்தவர் இறந்துவிட்டார் அல்லது சாட்சி சொல்ல வரவில்லை என்று காரணம் காட்டி ஊழல் பேர்வழிகளை தப்பவிடக்கூடாது. அரசு ஊழியர் லஞ்சம் வாங்கியது தொடர்பான இதர சாட்சிகள் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் கிடைத்த சாட்சியங்களை வைத்து விசாரணை நடத்தி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தீர்ப்பு
தீர்ப்பு

லஞ்சம் வாங்குவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழ்குற்றமாகும். ஆதாயத்திற்காக ஒருவர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றமாகும் என்றும் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. தேசநலன் கருதி லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் மீது உரிய விசாரணை நடத்தி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் தண்டனை வழங்கினால் தான் ஊழலற்ற சமுதாயத்தை நிலைநாட்ட முடியும் என்றார்.

ஊழல் தடுப்புச்சட்டம் தொடர்பாக கே.சந்தானம் கமிட்டி அறிக்கையும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நாட்டில் ஊழல் பெருக்கெடுத்துவிட்டதையும், பொது நிர்வாகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், “ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை புகார் கொடுத்தவர்களும், அரசு தரப்பினரும் எடுப்பார்கள் என்று நம்புகிறோம். அப்படிச் செய்தால்தான் அரசு நிர்வாகம் ஊழலிலிருந்து விடுபட்டு நல்ல நிர்வாகத்தை தரமுடியும்” என்று தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com