தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று சுற்றிப் பார்த்ததுடன் அது குறித்து பெருமிதமாக டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார், இயக்குநர் ராஜமௌலி. இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர், எந்தவித பரபரப்பும் இல்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்து சென்றிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலமாக தேசிய அளவில் கவனம் பெற்றவர், இயக்குனர் ராஜமௌலி. வரலாற்று பின்னணியில் உள்ள திரைப்படங்களை உருவாக்கியதுடன், அதை பெரிய அளவில் வெற்றி பெற வைத்த சாதனையும் இயக்குநர் ராஜமௌலிக்கு உண்டு.
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கியமான கோயில்களுக்கு தன்னுடைய குடும்பத்தினருடன் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்திருப்பதோடு, சுற்றுப்பயணத்தில் எடுத்த வீடியோவையும் பகிர்ந்துகொண்டிருககிறார்.
தமிழ்நாட்டில் சாலை பயணம் மேற்கொள்ள நீண்ட நாட்களாக விரும்பினேன். என் மகளின் விருப்பப்படி தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்தோம். ஜூன் கடைசி வாரத்தில், தமிழ்நாட்டின் மையப்பகுதிகளில் உள்ள ஸ்ரீரங்கம், தாராசுரம், பிரகதீஸ்வரர் கோயில், ராமேஸ்வரம், கானாடுகாத்தான், தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம்.
நாங்கள் சென்று பார்த்த கோயில்களின் நேர்த்தியான கட்டடக்கலை ரசிக்க வைத்தது. பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என பல தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் கலை பங்களிப்பு, ஆன்மீக சிந்தனை உண்மையிலேயே எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பகோணம் மட்டுமின்றி சென்ற வந்த அனைத்து இடங்களிலும் உணவு அருமையாக இருந்தது. இந்த சுற்றுப்பயணம் எனக்கு மிகுந்த புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது.
தனது படங்களில் பிரம்மாண்டமான அரண்மனைகள், கோயில்களை உருவாக்கி, தேசிய அளவில் கோயில் கட்டடக்கலையை பெரிய அளவில் கொண்டு சென்ற இயக்குநர் ராஜமௌலி தமிழ்நாட்டு கோயில்களை பற்றி குறிப்பிட்டிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது என்கிறார்கள், வரலாற்று ஆர்வலர்கள்.
தமிழ்நாட்டு மக்களே இன்னும் சென்று பார்த்து ரசிக்காத பல்வேறு கோயில்கள் இன்னும் பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருக்கின்றன. இயக்குநர் ராஜமௌலி போன்ற வெற்றிகரமாக இயக்குநர்களின் படங்களில் தமிழ்நாட்டு கோயில்கள் இடம்பிடித்தால் பெரிய அளவில் கவனம் பெறும். தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரிதும் கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை