ஒரு புதிய ஆய்வில், காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் பரிணாம வளர்ச்சியில் இடைவெளி ஏற்படும் என்றும், இதனால் பல்லுயிர் பெருக்கம் கூட பாதிக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமுள்ள விலங்குகள், தாவரங்கள், பூச்சிகள் போன்றவை பல குழுக்களாகப் பிரிந்து, தனித்தனிப் பாதையில் பயணிக்கின்றன. இந்த தனித்தனி உயிரினங்களின் பாதையானது இறுதியில் வெவ்வேறு விதமான பரிணாமப் பரம்பரைகளை உருவாக்குகிறது. ஆனால், ஒரு புதிய ஆய்வில், பூச்சிகளின் பரிணாம வளர்ச்சியின் சீரான மற்றும் சிக்கலான உருவாக்கங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆப்பிள் மேகோட் ஈ, அமெரிக்காவில் ஒரு பெரிய விவசாயப் பூச்சியாகும். 1850 களில் நியூயார்க் மாகாணத்தில் ஹட்சன் பள்ளத்தாக்கில் இந்த ஈக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாழத் தொடங்கின. இதில் ஒரு குழுவானது ஹவ்தோர்ன் மரங்களிலும், மற்றொரு குழு ஆப்பிள் மரங்களிலும் உணவை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தது. இந்த இரண்டு குழுக்களையும் ஆய்வு செய்ததில், காலநிலை மாற்றம் எவ்வாறு இயற்கையான பூச்சி பரிணாம வளர்ச்சியில் கல்லை எறிகிறது என்பதை அடையாளம் கண்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
இவர்களின் கூற்றுப்படி ஹவ்தோர்ன் பழமானது, ஆப்பிளை விட மூன்று அல்லது நான்கு வாரங்கள் கழித்தே பழுக்கிறது. இதனால், இந்த இரண்டு பூச்சிக் குழுக்களின் இனப்பெருக்க அட்டவணையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் இந்த இரண்டு ஈக்களின் குழுக்களும், இரண்டு வெவ்வேறு வழிகளில் வினைபுரிவது தெரியவந்துள்ளது. இந்த மாற்றத்திற்கு அதிக மரபணு வேறுபாடு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனவே இந்த வகை ஈயின் புழுவை உண்ணும் பல்வேறு ஒட்டுண்ணிக் குளவிகள் மீது இது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சோதனையின் ஒரு பகுதியாக, கடந்த 10 வருட காலநிலை தரவுகளின் மூலம் வெவ்வேறு ஈக்கள் மற்றும் ஒட்டுண்ணிக் குளவிகளை ஆராய்ச்சியாளர்கள் வளர்த்தனர். இந்த சோதனையில் தான் காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் மரபணு மாற்றமடைந்த பூச்சிகளை, மற்ற பூச்சிகளோ விலங்குகளோ உண்ணும்போது, அவற்றினுடைய வாழ்க்கை சுழற்சியிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது அவற்றின் உயிர்வாழும் தன்மையை கடினப்படுத்தலாம் அல்லது அதிக உயிரினங்களை உருவாக்கும் செயல்முறையை நிறுத்தலாம் என்கின்றனர்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மரபணு மாற்றமடைந்த ஈக்களின் புழுக்களை உண்ட ஒட்டுண்ணிக் குளவிகளின் வாழ்க்கை சுழற்சி, எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. குளவிகளின் உடலில் உள்ள அதிக வெப்பத்தினால் அவற்றிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனப்படுகிறது. ஒருவேளை மற்ற விலங்குகளால் தன் இரையின் வாழ்க்கை சுழற்சியை ஒத்திசைக்க முடியாவிட்டால், இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.