தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்காத உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்காத உடற்கல்வி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் ஓட்டப்பந்தயம், நீச்சல், கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை, கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால், கேரம், ஜிம்னாஸ்டிக், கபடி போன்ற பலவித விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் மாநில அளவில் தகுதி பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்தப் போட்டிகளில் மாணவர்கள் பெறும் பதக்கங்களின் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, உயர்க்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களில் சேர்வதற்கான தகுதியை அவர்கள் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பும். அதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முதன்மை உடற்கல்வி இயக்குனர், விளையாட்டு வீரர்களை தேர்வுச் செய்து பட்டியலை தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பார். அந்த வகையில், இந்த வருடம் 247 மாணவர்களை தேர்வு செய்து மே மாதம் 29ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான கடிதம் கடந்த மே மாதம் 11ம் தேதி லக்னோவில் இருந்து அனுப்பப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தின் சார்பாக இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்களை தேர்வு செய்து அனுப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பள்ளிக்கல்விதுறை வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, ‘தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்வதற்கான எந்த கடிதம் முறையாகச் சென்று சேரவில்லை. தகவல் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க பள்ளி மாணவர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு அதற்கான நிதி முறையாக ஒதுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ் வைத்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேரும்பொழுது பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் கூடுதலாக மதிப்பெண்கள் விளையாட்டு பிரிவு தரவரிசையின்போது கிடைக்கும்.

ஆனால், இந்த வருடம் தமிழகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளாததால் விளையாட்டுப் பிரிவில் மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பினை இழந்து உள்ளனர். இந்த நிலையில், தமிழக பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க உரிய நடவடிக்கை எடுக்காததால் உடற்கல்வி துறை முதன்மை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அதிரடியாக உத்தரவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com