அமெரிக்காவில் டெக்னாலஜி துறைகள் பெரும் பொருளாதார சரிவினை சந்தித்த பொழுது, தங்களை வியாபார சந்தையில் நிலைநிறுத்தி கொள்ள தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களும் லே ஆஃப் செய்வதை தங்கள் வழக்கமாக்கி வருகிறது .
பொழுதுபோக்கு மற்றும் ஸ்ட்ரீமிங் துறையில் இருக்கும் உலகின் முன்னணி நிறுவனமான டிஸ்னி இன்று, தனது உலகளாவிய வர்த்தகச் சந்தையில் இருந்து சுமார் 7000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது அதன் ஊழியர்கள் பெரும் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்ட் டிஸ்னி கடந்த 5 வருடத்தில் சுமார் 3 முறை மறுசீரமைப்பு பணிகளைச் செய்துள்ளது. இதற்கு முன்பு பொழுதுப்போக்குத் துறையில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் டிஸ்கவரி இன்க், நெட்பிளிக்ஸ் ஆகியவை பணிநீக்கத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கடந்த வாரம் வேலைவாய்ப்பு தரவுகள் சிறப்பாக இருந்த போதும் அந்நாட்டு மத்திய வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்திய காரணத்தால் கூடுதலான நெருக்கடி நிதிச் சந்தையில் உருவானது. இதன் எதிரொலியாகப் பணிநீக்க நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
உலகின் முன்னணி மற்றும் பிரபலமான வால்ட் டிஸ்னி நிறுவனம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிவிப்பில் சுமார் 7000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவை அறிவித்தது. இந்த அறிவிப்பு மூலம் எந்தப் பிராந்தியத்தில் அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் எழுந்தது.
வால்ட் டிஸ்னி நிர்வாகம் இந்த 7000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் மூலம் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான செலவுகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் ஸ்ட்ரீமிங் வர்த்தகத்தையும் லாபகரமானதாக மாற்ற முடியும் என வால்ட் டிஸ்னி நிர்வாகம் நம்புகிறது.
7000 ஊழியர்கள் பணிநீக்கத்தின் வாயிலாக வால்ட் டிஸ்னி தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 3.6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான உடன் அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தக நேரம் முடிந்த பிறகு 4.7 சதவீதம் வரையில் உயர்ந்து 117.22 டாலராக உயர்ந்தது.