ஈரோடு கிழக்கு தொகுதியில், 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.
ஈரோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைதொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் அணைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து
வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து, 26 ஆயிரத்து, 876 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில்1 லட்சத்து, 10 ஆயிரத்து 713 ஆண் வாக்களர்களும்,1 லட்சத்து, 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர்.
2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில் முதன் முறையாக தேமுதிகவின் சந்திரகுமார், 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக வின் தென்னரசு, 2021 ஆம் ஆண்டில் திருமகன் ஈவெரா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிருஷ்ணன் உன்னி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் என்ன என்பது குறித்தும்,
அதனை அரசியல் கட்சிகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், பொதுக் கூட்டங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் அரசியல் கட்சிகள் பின்பற்றும் நடைமுறைகள் என்ன, என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த பொது கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி இது குறித்து பேசியபோது, இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது .
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
தேர்தலை நியாயமாகவும் வெளிப்படை தன்மையுடனும் நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 25 வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
52 இடங்களில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் வெப் கேமராகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் .
இதுவரை 20 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம்.
தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறை முழுமையாக கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்கு சாவடி மையம் அமைக்க ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி தெரிவித்துள்ளார்.