அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக கருத்து கேட்கும் படிவம்!

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக கருத்து கேட்கும் படிவம்!

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட வாரியாக கருத்து கேட்கும் படிவம் இன்று விநியோகிக்கப்பட உள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், அதிமுக விவகாரத்தில் இருதரப்பும் ஏன் பேசி முடிவு செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியது. பிரச்னைகளை நீடித்துக் கொண்டே செல்ல முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினரை உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர்.வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள், முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் ஆணையிட்டனர். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே செல்லும் என்று கூறி, எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு முடித்து வைக்கப்பட்டது.

அதிமுக அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் தரப்பில் கருத்து கேட்கும் படிவம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து மாதிரி படிவம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டு, திங்கட்கிழமைக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com