

ஜீவனாம்சத்தின் நோக்கம், திருமண உறவு முறிந்தால் அல்லது சட்டப்படி பிரிந்தால் நிதி ரீதியாக, பலவீனமான இணையரின் வாழ்க்கையை பாதுகாப்பதாகும். எனவே ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு தொகை வழங்கப்பட வேண்டும். இது பெண்களின் சுயமரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துகிறது.
ஆனால், பெண்களின் பாதுகாப்புக்காக உள்ள இந்த சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று தொடர்ந்து விமர்சனங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வரதட்சணைக் கொடுமை என்பது இன்னும் தீர்க்கப்படாத ஒன்றாக இருக்கிறது. அதாவது, சமீபகாலமாக ஒருசில பெண்கள் சுயநலத்திற்காக சட்டத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது வரதட்சணைப் புகார் அளித்து வருகின்றனர். அதேநேரத்தில், திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்லி வேண்டுமென்றே ஜீவனாம்சத்தை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்,உழைப்புக்கும் வளர்ச்சிக்கும் எந்த பங்களிப்பும் செலுத்தாமல் சொத்தில் பங்கு கேட்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் சுயமாக சம்பாதிக்கும் மனைவிக்கு விவாகரத்து பெற்ற கணவர் ஜீவனாம்சத்தை மறுக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மனைவி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டினாலும் கணவரின் தகுதிக்கு ஏற்ப வாழ அவருக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீவனாம்சம் என்பது வறுமையை தகுப்பதற்காக மட்டுமல்ல கணவரின் அந்தஸ்துக்கு நிகரான கண்ணியமான வாழ்க்கையை மனைவி வாழ்வதை உறுதிப்படுத்துவதே அதன் நோக்கம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மனைவி வேலை செய்தாலும், அவரது வருமானம் திருமண வாழ்க்கையின் தரத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இல்லாவிட்டால், கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும், இது சமூக நீதி மற்றும் தங்கியுள்ள துணையின் கண்ணியமான வாழ்க்கைக்காக வழிவகுக்கிறது.
மனைவி வருமானம் ஈட்டுவதை காரணம் காட்டி ஜீவனாம்சத்தை மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
மனைவி வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும், கணவரின் வருமானத்தை விடக் குறைவாகவோ அல்லது தன் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத அளவிலோ இருந்தால், அவர் ஜீவனாம்சம் (Alimony) பெற உரிமை உண்டு என நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன. ஜீவனாம்சம் என்பது சமூக நீதி மற்றும் தார்மீகக் கடமை, இது பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வழங்கப்படுகிறது.
பொதுவாக, கணவனின் நிகர வருமானத்தில் 25% முதல் 30% வரை ஜீவனாம்சமாக வழங்க நீதிமன்றங்கள் பரிசீலிக்கின்றன. எனவே, "மனைவி சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது" என்பது தவறான புரிதல்; இருவரின் நிதியியல் நிலைமைகளை ஒப்பிட்டே நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும்.