பெற்றோரைப் பிரித்து தனிக்குடித்தனம் கேட்டால் விவாகரத்து: உயர்நீதி மன்றம்!

பெற்றோரைப் பிரித்து தனிக்குடித்தனம் கேட்டால் விவாகரத்து: உயர்நீதி மன்றம்!

ன்றைய தலைமுறைப் பெண்கள் பலரும் திருமணம் ஆனவுடன் கணவனின் பெற்றோரிடமிருந்து அவனைப் பிரித்து தனிக் குடித்தனம் செல்வதையே பெரிரும் விரும்புகின்றனர். இதற்காக பல கணவன் மனைவியிடையே தினம் தினம் சண்டை நடைபெறுவதும் உண்டு. இந்த சண்டை அவர்கள் இருவருக்கும் இடையே பெரிய இடைவெளியைக் கூட ஏற்படுத்தி விடுவது உண்டு. இப்படித்தான் கொல்கத்தாவை சேர்ந்த சுஷ்மா மண்டல் என்ற பெண் தனது கணவனை மனரீதியாக பெரிய அளவில் சித்ரவதை செய்திருக்கிறாள். அந்தக் கணவனுக்கு குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுஷ்மா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சௌமன் சென் மற்றும் உதய்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்தப் பெண்ணின் கணவன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் தன் கணவரை மன ரீதியாக கடுமையாக சித்ரவதை செய்து வந்துள்ளார். அவரை கோழை என்றும், வேலை இல்லாதவன் என்றும் கடுமையான வார்த்தைகளைக் கூறி திட்டி இருக்கிறார். அதுமட்டுமின்றி, கணவரை அவரது பெற்றோரிடமிருந்து பிரித்து தனிக்குடித்தனம் செல்லவும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன பிரச்னைகளுக்காக கணவரின் பெற்றோரிடம் அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார்” என்று தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்தியக் குடும்பத்தில் திருமணத்துக்குப் பிறகு மகன்கள் தங்களது பெற்றோருடன்தான் வசிக்க வேண்டும். அப்படித் தனியாகப் பிரிந்து செல்வதாக இருந்தால் அதற்குத் தகுந்த காரணங்கள் இருக்க வேண்டும். இந்த வழக்கில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னையில் ஈகோ மற்றும் நிதிப்பிரச்னையும் இருக்கிறது. மனைவியின் கட்டாயத்தால் கணவன் தனது பெற்றோரைப் பிரிந்து தனியாகச் சென்று வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

இந்திய கலாசாரத்தில் பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது. எனவே மகன்கள்தான் பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆகவே திருமணத்துக்குப் பிறகு கணவனை பெற்றோரிடமிருந்து பிரிக்க மனைவி முயன்றால், அந்த மனைவியிடமிருந்து கணவன் விவாகரத்துக் கோரலாம். அதோடு, கணவனை மனைவி கோழை என்று கூறினாலோ, வேலையில்லாதவன் என்று கூறினாலோ அதுவும் கணவனை மனைவி கொடுமைப்படுத்துவதாகவே அர்த்தம். இந்தக் காரணங்களின் அடிப்படையில் கணவன் மனைவியிடமிருந்து விவாகரத்துக் கோரலாம்” என்று தெரிவித்தனர். அதோடு, கீழ் கோர்ட் வழங்கிய விவாகரத்தையும் உறுதி செய்து உத்தரவிட்டு இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com