திமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல்... கற்களைக் கொண்டு தாக்குதல்

திமுக - நாம் தமிழர் கட்சியினர் மோதல்... கற்களைக் கொண்டு தாக்குதல்
Published on

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது திமுகவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் காலமான நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. வரும் 27 ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் மூலம் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இவிகேஎஸ். இளகோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம்தமிழர் கட்சியின் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு   நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் வீரப்பன்சத்திரத்திலிருந்து ஊர்வலமாகச் சென்றார். காவிரி சாலையில் திமுகவினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

 இதையடுத்து கற்களையும் கட்டைகளையும் வைத்து தாக்கிக் கொண்டதால் பலர் காயமடைந்தனர். நாம் தமிழர் கட்சியில் 7 பேர் காயமடைந்துள்னளர். போலீசார் தடியடி நடத்தினர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் காயமடைந்த போலீசாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சீமான் நலம் விசாரித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,

நாங்கள் விதியை மீறி அனுமதி இல்லாத தெருக்களில் வாக்கு சேகரித்ததாக கூறுகிறார்கள். அப்படி என்றால் திமுக, அதிமுக கட்சியினர் அனுமதி பெற்றுதான் இந்த வேலைகளை செய்து வருகிறார்களா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? இதுதான் ஜனநாயகமா? வாக்கு சேகரித்துக்கொண்டு அமைதியாக வந்துகொண்டிருந்த எங்கள் மீது எதற்காக தாக்குதல் நடத்தினார்கள்?

வீட்டின் முதல் மாடியில் நின்றுக்கொண்டு எங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் எங்கள் தோழர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காரை அடித்து நொறுக்கிவிட்டார்கள். எங்கள் மீது தாக்குதல் நடத்தியது திமுகவும் காங்கிரஸ் கட்சியும்தான். அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் வந்துவிட்டார்கள். நாங்களும் அதே மாதிரி வந்திருந்தால், தேர்தல் நடக்காது சண்டைதான் நடக்கும். இப்படித்தான் ஆட்சி நடத்துவார்களா? என்ன இது ஜனநாயகமா? இது கேடுகெட்ட பணநாயகம் என்று கூறியுள்ளார்.

வங்கி கொள்ளையில் கண்காணிப்பு கேமராவில் இருப்பதை பார்த்து தான் குற்றவாளிகளை பிடிக்கிறார்கள். தெருவில் தங்க சங்கிலி, கொலை நடந்தால் கேமராவில் பதிவான காணொலியை சான்றாக எடுத்து விசாரிக்கின்றனர். இந்த தேர்தல் தொடர்பான வீடியோவை ஆதாரமாக எடுக்காமல் உள்ளனர். வரும் 25ம் தேதி வரை பரப்புரை உள்ளது. அதுவரை நான் இங்கு பரப்புரை செய்வேன். களம் என் கையில் உள்ளது. பணம் மட்டும் தான் அவர்களின் கையில் உள்ளது. திமுக 3 ஆயிரம், அதிமுக 2 ஆயிரம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இன்னும் வரும் நாட்களில் ஓட்டுக்கான பணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது'' என்றார் சீமான்,

இந்த கலவரம் காரணமாக சீமான் அங்கிருந்து புறப்பட்டதாகவும், அவரின் பிரச்சார வாகனத்தில் செங்கல், கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு நேரடி தாக்குதலில் திமுக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது அப்பகுதியில் பதற்றமான ஒரு சூழ்நிலையை நிலவி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com