கட்டித் தழுவிக்கொண்ட திமுக அதிமுக எம்.பிக்கள்!

கட்டித் தழுவிக்கொண்ட திமுக அதிமுக எம்.பிக்கள்!
Published on

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அவரது உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி உள்பட, பாஜக எம்.பிக்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்ததைக் காண முடிந்தது. ஆனால், இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான காங்கிரஸ் எம்.பிக்களை காண முடியவில்லை. சில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் ராகுல்காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே ஸ்ரீநகரில் முகாமிட்டு இருக்கின்றனர்.

அதோடு, ஸ்ரீநகரில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், மல்லிகார்ஜுன கார்கே, அதீர் ரஞ்சன், சௌதாரி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. எப்போதும் தனது கட்சி எம்.பிக்களோடு புடைசூழ அமர்ந்திருக்கும் சோனியாகாந்தி நேற்று தனியாக முன்வரிசையில் அமர்ந்திருந்தார். ஜனாதிபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் போன்ற பலர் அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றதைக் காண முடிந்தது. சோனியாவுக்கு அருகில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

வழக்கமாக ஒரு பெஞ்சில் ஐந்து பேர் மட்டுமே அமரும் நிலையில், நேற்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, திமுக எம்.பி கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவுக்கதா ராய், பாஜக எம்பி நீரஜ் சேகர், சிவகுமார் உடாசி, நிஷிகந்த் துபே ஆகிய ஆறு பேர் ஒன்றாக, ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்ததைக் காண முடிந்தது. அதேபோல், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை ஆகியோர் பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலின்போது, ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை செய்ததுடன், அவர்கள் இருவரும் இறுக்கமாகக் கட்டித் தழுவி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டது அவையில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது!

மேலும், மக்களவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வானிடம் பேசிய பிரதமர் மோடி, அவரது தாயாரின் உடல் நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தது போன்ற நிகழ்வுகள் தேசிய அரசியல் களம் ஒரு பக்கம் கொதித்துக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் அரசியல் தலைவர்களின் நாகரிகத்தையும் காட்டுவதாகவே இருந்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com