

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவில் , விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று , ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியுள்ளது. சட்டமன்றத்தில் தவெக பெரும்பான்மையை நிரூபிக்க 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில் காங்கிரஸ், அதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவை கோரியுள்ளது.
முதலில் விஜய்க்கு ஆதரவாக திருமாவளவன் , பெ.சண்முகம் , அன்புமணி உள்ளிட்டோர் பேசினாலும் அடுத்த நாளிலேயே காட்சிகள் மாறியது. கம்யூனிஸ்டு கட்சிகள் , விசிக போன்றவை எந்த ஒரு பதிலும் கூறாமல் தற்போது மிகவும் அமைதியாக உள்ளன. இன்று அவர்கள் நடத்த இருந்த கட்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தினையும் ரத்து செய்துள்ளனர். ஆனால் , காங்கிரஸ் கட்சி 5 உறுப்பினர்களின் ஆதரவை விஜய்க்கு வழங்கி உள்ளது. ஆனாலும் தமிழக ஆளுநர் முழு பெரும்பான்மை ஆதரவு கடிதத்துடன் வருமாறு விஜய்யிடம் கூறியுள்ளார்.
தவெக – அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பிடி கொடுக்கவில்லை. அதே நேரம் அதிமுகவில் சிவி.சண்முகம் தலைமையில் 15 எம்எல்ஏக்களை கொண்ட குழு பாண்டிச்சேரியில் தங்கி, தவெகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசியல் நிபுணர்கள் சிலர் அதிமுக உடைய போவதாக கூறி வருகின்றனர்.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் திமுகவுடன், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக அரசியலில் 55 ஆண்டு காலமாக எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய இரு கட்சிகள் திமுகவும் அதிமுகவும். திமுகவை எதிர்த்து தான் 1972 ஆம் ஆண்டு அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார்.
தொடக்க காலத்தில் திமுகவில் கருணாநிதியும் எம்ஜிஆரும் , அண்ணாவின் தலைமையேற்று கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எம்ஜிஆரின் நட்சத்திர கவர்ச்சி திமுகவை விரைவில் ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. 1967 இல் அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவி ஏற்ற சில வருடங்களிலேயே கடும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அண்ணா மறைந்தார்.
அண்ணாவின் மறைவை தொடர்ந்து கருணாநிதியை முதல்வராக எம்ஜிஆர் முன்மொழிந்தார். கருணாநிதி முதல்வரான பின்னர், எம்ஜிஆருக்கும் அவருக்கும் பிணக்கு ஏற்பட்டதால் அவரைக் கட்சியில் இருந்து கருணாநிதி நீக்கினார். அதன் பின்னர் திமுகவை எதிர்த்து தனிக்கட்சி தொடங்கிய எம்ஜிஆர், தொடர்ச்சியாக மூன்று முறை ஆட்சியில் அமர்ந்தார்.இன்று வரையிலும் இது தமிழகத்தில் முறியடிக்கப்படாத அரசியல் சாதனை இது.
எம்ஜிஆர்க்கு பின்னர் அதிமுகவின் தலைமை பொறுப்பேற்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவும் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். மற்ற மாநிலங்களில் எதிர் எதிர் கட்சிகள் சில நிகழ்வுகளின் பொழுது, பரஸ்பரம் மரியாதை நிமித்தமாக சிரித்து பேசுவது வாடிக்கை. ஆனால், திமுகவினரிடம் அதிமுகவினர்கள் ஜெயலலிதா இருக்கும் வரை பேசிய வரலாறு இல்லை. அந்த அளவிற்கு ஜெயலலிதா திமுக எதிர்ப்பை மிகக் கடுமையாக கடைப்பிடித்து வந்தார்.
இப்படிப்பட்ட எதிரி கட்சிகள் இன்று சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர், ஒருவருக்கொருவர் கூட்டணி வைக்க முதல் கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அரசியலில் இது போன்ற விஷயங்கள் புதிதல்ல!
காங்கிரஸை தீவிரமாக எதிர்த்து வளர்ந்த திமுக , அதிமுக ஆட்சியை பிடித்த பின்னர் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தது. இன்று தவெக வெற்றி பெற்றதும் திமுகவும் அதிமுகவும் கைகோர்க்க நிற்கின்றன. இதில் அதிசயம் ஒன்றுமில்லை, அரசியலில் எதுவும் நிகழலாம்!