தகுதி இழப்புக்கு உள்ளாகும் திமுக கவுன்சிலர்!

தகுதி இழப்புக்கு உள்ளாகும் திமுக கவுன்சிலர்!

கோவை மாநகராட்சியின் 97வது வார்டு திமுக உறுப்பினர் நிவேதா. இவர் கோவை திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் மருதமலை சேனாபதியின் மகள் ஆவார். கோயம்புத்தூர் மாநகராட்சியிலேயே மிகவும் இள வயது கவுன்சிலராக இவர் இருந்து வருகிறார். 22 வயது கல்லூரி மாணவியாக தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி பெற்ற நிவேதா, தேர்தலில் களமிறங்கும்போதே மேயர் பதவிக்கு வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், திமுக சார்பில் கல்பனா கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, நிவேதாவுக்கு மாநகராட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

எதிர்பார்த்தபடி மேயர் பதவி கிடைக்காததால் அவர் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், நிவேதா கவுன்சிலர் பதவி தகுதி இழப்பு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. அதேசமயம், நிவேதா வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றுள்ளதால்தான் மாமன்ற கூட்டங்களில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள், மாநகராட்சி நிர்வாக அறிவிப்பின்படி நடத்தப்படும். இதில் தொடர்ந்து மூன்று மாமன்ற கூட்டங்களில் ஒரு கவுன்சிலர் பங்கேற்கவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(1)ன்படி உள்ளாட்சி பதவி பறிபோகும். அதன்படி கவுன்சிலர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். பிறகு, அடுத்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 32(4)ன்படி சம்பந்தப்பட்ட நபர் கூட்டங்களில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஏதாவது தெரிவித்து இருந்தால் மாநகராட்சி ஆணையாளர் அதனை வெளியிடுவார். அக்காரணத்தை தொடர்ந்து, தகுதி இழந்தவர்கள் மீண்டும் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டம் முடிவு செய்யும்.

இந்த நிலையில், நிவேதா கடந்த ஜனவரி, மார்ச், மே ஆகிய மூன்று மாதங்களில் நடைபெற்ற மாமன்றக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காததை தொடர்ந்து இன்று முதல் அவர் தகுதி இழக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு, கவுன்சிலர் நிவேதா காரணம் ஏதாவது தெரிவித்தால் அதனை மாநகராட்சி ஆணையாளர் அடுத்த கூட்டத்தில் வெளியிடுவார். அதனையடுத்து அவர் மீண்டும் பதவியில் தொடர்வது குறித்து மாமன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், பதவி இழப்பு செய்யப்படும் விஷயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com