கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் பிரச்னையை இருட்டடிப்பு செய்கிறார்கள் - சசிகலா காட்டம்

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர் பற்றி கவலைப்படாமல் பிரச்னையை இருட்டடிப்பு செய்கிறார்கள் -  சசிகலா காட்டம்

கோவை விமானநிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கடைமடையில் காவிரி தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுவதாகவும்,  தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தருவதில் தி.மு.க அரசு அலட்சியம் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரில் 4 டி.எம்.சி தண்ணீர் கூட வந்து சேரவில்லை. சென்ற மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து விட்டது ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றார்.

கடைமடை காவிரியில் குறுவை சாகுபடி நடந்து வருகிறது. சென்ற மாதம் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடாக 76 கோடியை ஒதுக்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். 5 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கான தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள். மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர், ஒரு மாதத்திற்கு மேலாகியும் கடைமடைக்கு வந்து சேரவில்லை என்கிறார்கள்.

குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் வந்து சேரவில்லை என்கிறார்கள். வெண்ணாறு, ஓடம்போகியாறு, முல்லையாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. மேட்டூரில் கைவசமுள்ள தண்ணீரும் அடுத்து வரும் பத்து நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

இந்நிலையில்தான் கடைமடை விவசாயிகளுக்காக சசிகலா குரல் கொடுத்திருக்கிறார். மூன்றாண்டு கால தி.மு.க ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றவர் ஆட்சியில் இருப்பவர்கள் அரசியல் பேசுவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார்களோ தவிர நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை.  ஊடகங்கங்களும் ஆளுங்கட்சிக்கு பயந்து, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட செய்திகளை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com