‘என்எல்சி நிறுவனத்துக்கு துணை நிற்கிறது திமுக அரசு’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

‘என்எல்சி நிறுவனத்துக்கு துணை நிற்கிறது திமுக அரசு’ எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

‘விளைநிலங்களின் நடுவே நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் செயல் கண்டிக்கத்தக்கது. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது’ என தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…

“என்எல்சி நிறுவனம் தனது இரண்டாம் சுரங்க விரிவாக்கத்துக்காக நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில், அப்பகுதியில் வாழும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் அதிமுக உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை என்எல்சி நிர்வாகம் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இப்பகுதி மக்களை கைவிட்டு விட்டு என்எல்சியின் நில எடுப்புக்கு துணை நிற்கிறது.

இப்பகுதி விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளாக, ‘மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி போதிய சமய அளவு இழப்பீடு வழங்குதல், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்குதல், என்எல்சி நிறுவன நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காலகாலமாக வேலை செய்து வரும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து விரைவில் முடிவினை அறிவிக்கக் கோருதல், ஏற்கெனவே என்எல்சி நிறுவனத்துக்கு நிலம், வீடுகளைக் கொடுத்து இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு இதுவரை அந்த நிறுவனம் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. அந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்’ என்பன போன்றவற்றை முன்வைத்து இருக்கின்றனர்.

1989க்கு பிறகு நிலம் கொடுத்தவர் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நிரந்தர வேலை வழங்கவில்லை. எனவே, நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். அதேபோல், சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, எவ்வித வளர்ச்சித் திட்டங்களையோ, நல உதவித் திட்டங்களையோ செய்து தரவில்லை. இது குறித்து எந்த நியாயமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் என்எல்சி நிறுவனம் நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாயிகளுடைய நம்பிக்கையை இழந்திருப்பதால் விவசாயிகள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அமைச்சர்கள் இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகளை, திமுக விவசாயிகள் மற்றும் திமுக அல்லாத விவசாயிகள் என்று இரண்டாகப் பிரித்து, திமுக அல்லாத விவசாயிகளை பழி வாங்குவதற்கு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று செய்திகள் வருகின்றன.

நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்த விவசாயிகளின் பேச்சுவார்த்தை முழுமையடையாத நிலையில், புவனகிரி தொகுதியில், வளையமாதேவி பகுதியில் கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த நேற்று (26.7.2023) காலை திடீரென்று 1000க்கும் மேற்பட்ட காவலர்களின் துணையுடன் என்எல்சி நிறுவனம், நெல் பயிரிட்ட நிலத்தில் ராட்சத இயந்திரங்களை இறக்கி வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் விவசாயிகள் விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறிய வள்ளலார் வாழ்ந்த மண்ணில் விளைந்து நிற்கும் நெற்பயிர்களை அழிப்பதற்கு இந்த அரசுக்கு எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை.

கடலூர் மாவட்டத்தில் நில எடுப்பு என்ற பெயரில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்காமல் விளை நிலங்களில் உள்ள நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற என்எல்சி நிறுவனத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறதா? அல்லது சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான காவலர்கள் துணையுடன் மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி, விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கும் என்எல்சி நிர்வாகத்தின் செயலுக்கு துணை போகின்ற அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, தற்போது முதலமைச்சரானவுடன் ஒரு நிலைப்பாட்டோடு இருக்கிறார். இதுதான் திராவிட மாடல் அரசு. விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றுக்கு நிரந்தர முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்எல்சி. நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்" என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com