
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் திருமாவளவன், ஆணவக் கொலைகளை தடுக்க தி.மு.க அரசு ஒரு தனிச்சட்டத்தை இயற்றவேண்டும் என்றும் கிருஷ்ணகிரி பகுதியை ஆணவக் கொலை மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. சென்ற மாதம் சட்டமன்றத்தில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆணவக்கொலைகளுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
சம்பவம் குறித்து விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஜெகனை பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் சமூக நீதி காக்கும் மண்ணாக தமிழகம் இருந்து வருவதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் சமூக நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி வந்திருந்த திருமாளவன், கௌரவ கொலை செய்யப்பட்ட ஜெகனின் பெற்றோர் மற்றும் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தில் ஆணவ கொலை செய்யப்பட்ட சுபாசின் மனைவி அனுசுயா குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிதிஉதவி வழங்கினார். ரூ.2 லட்சத்தை ஜெகனின் பெற்றோரிடமும், ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்தை சுபாசின் மனைவி அனுசுயாவின் பெற்றோரிடமும் வழங்கப்பட்டது.
பின்னர் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றவேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து ஏரளாமான ஆணவ கொலைகள் நடக்கின்றன. சாதி ஆணவக் கொலைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்திய அளவிலும் ஆணவ கொலைகள் நடந்து வருகின்றன.
மத்திய அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை இயற்றுவதில் ஏனோ தயக்கம் காட்டி வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை கருத்து தெரிவித்தும், மத்திய அரசு தலையசைக்க தயாராக இல்லை. எனவே தமிழக அரசு ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக 12 மணி நேர வேலை நேர திருத்த மசோதா பற்றி கருத்து தெரிவித்த திருமாவளவன், தொழிலாளர்களுக்கு விரோதமான ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிறைவேறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் இந்த நிலைப்பாடு தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கான கொள்கைகளுக்கு எதிராகவும் இருக்கிறது. எனவே முதல்வர் உடனடியாக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆணவக் கொலை விஷயத்தில் இதுவரை தோழமை சுட்டலோடு விமர்சித்துக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் இன்று கூடுதல் அழுத்தத்தை தந்திருக்கிறார்கள். இனி, முடிவு முதல்வரின் கையில்.