விலைவாசி உயர்வை தி.மு.க அரசுதான் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் - ஓ.பி.எஸ் அறிவுரை!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

விலைவாசி உயர்வு குறித்து நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார், ஓ.பி.எஸ். இரண்டு ஆண்டுகளில் விலைவாசி பெரிய அளவுக்கு உயர்ந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளவர், விலைவாசியை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று அறிவுரையும் தந்திருக்கிறார்.

வறுமைக்கோட்டிற்கு கீழ் ஒருவர் கூட இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி தந்த தி.மு.க, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை 20 சதவீதமாவது குறைத்திருக்கவேண்டும். அதற்கு மாறாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஓ.பி.எஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ அரிசி 55 ரூபாய் என்ற அளவில் வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட அதே அரிசி தற்போது 70 ரூபாயாக உயர்ந்து இருக்கிறது.

எண்ணெய் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. அனைத்து ரக சமையல் எண்ணெய்களும் குறைந்தபட்சம் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. இதை ஏற்றுக்கொள்ளும் விதமாக 54 அமுதம் அங்காடிகள் மூலமாக பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்வதாக அரசே அறிவித்துள்ளது. இது யானைப் பசிக்கு சோளப்போரி போல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கப்போவதில்லை.

விலைவாசி உயர்விற்கு மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், சர்வதேச சந்தை நிலவரம், உள்நாட்டு விளைச்சல் போன்றவை காரணமாக இருந்தாலும், பதுக்கல்தான் பிரதான காரணமாக இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 150 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றால், விளைந்த தக்காளியை பதுக்கி வைத்து, கொள்ளை இலாபம் சம்பாதிப்போர் மீது நடவடிக்கை எடுக்காததும், அதைப் பாதுகாத்து வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததும்தான் காரணம்

கடமையைச் செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இந்தக் கடமையைச் செய்திருந்தால், ஓரளவுக்கு விலைவாசி கட்டுக்குள் இருந்திருக்கும். தி.மு.க. அரசின் தற்போதைய நடவடிக்கை என்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்கு சமம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் ஏழை, எளிய மக்கள்தான். இனி வருங்காலங்களில், மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்ப பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், உற்பத்தி செய்த பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளவும், விளைந்த பொருட்களை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கவும், பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரைக் கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து விலைவாசி உயர்வினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக அறிக்கையை முடித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com