'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' - அமலாக்கத்துறை சோதனைக்கு அஞ்சாத தி.மு.க நிர்வாகிகள்

கோப்பு படம்
கோப்பு படம்
Published on

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனை மாலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருநது கிளம்பிய முதல்வர் ஸ்டாலின், பொன்முடி வீட்டில் நடைபெற்ற சோதனைகளுக்கு கண்டனத்தை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தி.மு.கவினர் கண்டனத்தை தொடர்கிறார்கள்.

சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடியும் அவரது மகனும் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

காலை தொடங்கி நடைபெற்ற சோதனையில்  பொன்முடியின் வீட்டிலிருந்து 70 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமெரிக்க டாலர் உள்பட 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலையிலும் சோதனை தொடர்ந்து வரும் நிலையில் பொன்முடியின் வீட்டிற்கு வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் நகைகளும் பறிமுதல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

பெங்களூர் செல்லும் முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த முதல்வர்,  பாஜக அரசால் அமலாக்கத்துறை ஏவப்பட்டுள்ளது. பாஜகவுக்கு ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை. வடமாநிலங்களில் பயன்படுத்திய உத்தியை தமிழ்நாட்டில் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டத்தின் நோக்கத்தைத் திசை திருப்புவதற்காக பாஜக செய்யும் தந்திரம்தான் இந்த அமலாக்கத்துறை சோதனை என்றார்.

சுற்றுப்பயணத்தில் இருந்த அமைச்சர் துரைமுருகனிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்டபோது, சம்பந்தப்பட்டவர்களைத்தான் கேட்கணும். "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே" பாட்டுதான் பாடணும் என்று வழக்கமான பாணியில் பதிலளித்தார்.  பொன்முடி வீட்டில் நடைபெறும் சோதனை பற்றி குறிப்பிட்ட அமைச்சர் முத்துசாமி, என்ன தவறு செய்தார்; அவர் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது. அமலாக்கத்துறை சோதனை என்பது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை. எதையும் சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.

இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?. 100 வழக்குகளில் 2-ல் கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அமலாக்கத்துறைக்கு சோதனைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்; மிசாவையெல்லாம் பார்த்திருக்கிறோம். பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றார்.

எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பதால் மத்திய அரசு அமலாக்கத்துறையின் மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து நெருக்கடி கொடுத்து வருகிறது. பொன் முடி வீட்டில் சோதனை நடைபெறும்போது சட்ட ஆலோசனை வழங்குவதற்கு கூட உள்ளே அனுமதிக்கவில்லை.

திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பா.ஜ.க பல தொகுதிகளில் தோல்வியை சந்திக்கப்போகிறது என்றார்.

தி.மு.க தலைவர்கள், நிர்வாகிகளின் எதிர்வினைகளை பார்க்கும்போது அமலாக்கத்துறை சோதனையை எதிர்பார்த்து இருந்ததாகவே புரிந்து கொள்ள முடிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேர்ந்தது தங்களுக்கும் நேரும் என்று பெரும்பாலான அமைச்சர்கள் எச்சரிக்கையுடன் இருநது வந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே அமலாக்கத்துறை சோதனையை மட்டுமல்ல அது ஏற்படுத்திய பரபரப்பான சூழலையும் திறமையாக கையாண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com