திருச்சிக்கு திமுக என்ன செய்தது : அமைச்சர் கே.என். நேரு பதில்!

திருச்சிக்கு திமுக என்ன செய்தது : அமைச்சர் கே.என். நேரு பதில்!

திருச்சி மாநகராட்சி 8வது வார்டுக்கு உட்பட்ட லிங்கநகர் பகுதியில் வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு கூறியது, திருச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக திருச்சிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறி இருக்கிறார். அவர்கள் ஆட்சிக் காலத்தில் திருச்சிக்கு என்ன செய்தார்கள் என்று மட்டும் சொல்லட்டும். திருச்சிக்கு அதிமுகவால் கிடைத்தது டிஎன்பிஎஸ் காகித ஆலை மட்டுமே முதல் ஆலையை எம்ஜிஆர் தொடங்கி வைத்தார், 2வது ஆலையை ஜெயலலிதா தொடங்கி வைத்தார்கள்.

ஆனால் திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் தான் திருச்சிக்கு மருத்துவக் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி, புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், புதிய நீதிமன்ற வளாகம், பாலக்கரை மேம்பாலம் என்று பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்தார். அதைப் பின்பற்றிய தற்போதைய தமிழக முதல்வர் மு‌.க .ஸ்டாலின் திருச்சி மாவட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ரூபாயை ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு 300 கோடி ரூபாயும், புதிய மார்க்கெட் கட்டுமானத்திற்கு 100 கோடி ரூபாயும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பு அதிகப்படுத்தவும் 600 கோடி ரூபாய் செலவில் ஐடி பார்க்கும் அமைக்கப்பட்டு வருகிறது. இவை திருச்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்ற உள்ளன.

மேலும் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்டதை விட திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது மாநகராட்சி பகுதி முழுக்க பாதாள சாக்கடை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் புதிய சாலைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுத்தமான குடிநீர் கொண்டு செல்வதை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com