#JUST IN : பாஜக பாணியில் தவெக மிரட்டுகிறது - அண்ணா அறிவாலயத்தில் பரந்தாமன் பரபரப்பு பிரஸ் மீட்..!

அவதூறு வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுக்கப்பட்ட திருச்செந்தூர் எம்.எல்.ஏ; போலீஸை வைத்து பாஜாக பாணியில் மிரட்டுவதாக அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் கடும் சாடல்.
பரந்தாமன்
பரந்தாமன்
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் தொகுதியின் முன்னாள் அமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னர், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் நீதிபதி சிதம்பரம் முன்பு ஆஜர்படுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றக் காவல் மறுக்கப்பட்டு ரூ.10,000 பிணைத் தொகையில் சொந்த ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

விசாரணையின் போது "எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் முதலமைச்சர் பதவிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்திருந்தனர். ஜாமீன் பெற்று வந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் "எந்தக் காலத்திலும் எவருக்கும் அஞ்சமாட்டோம். ஆறு மாத காலத்திற்குள் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்" என்று எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது கைதுக்கு திமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களை கைதுசெய்துள்ளது ‘Take Diversion’ அரசு.தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?

வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.

“ஆணவம் அழிவிற்கு வழி!” என்று தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தற்போது இருவார பயணமாக இன்று அயல்நாடு பயணம் மேற்கொண்டுள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.

vijay
vijay image credit-newindianexpress.com

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் தவெக அரசின் செயல்களுக்கு காட்டமாக பதிலளித்து பேட்டி அளித்துள்ளார்.

"தவெகவில் இணையுமாறு திமுக எம்எல்ஏ அனிதா ராதா கிருஷ்ணனை மிரட்டியுள்ளனர். அவதூறு பேசியதாக புனையப்பட்ட வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனை அவசர அவசரமாக கைது செய்தது ஏன் ? அனிதா ராதாகிருஷ்ணன் இடம் 6 மணிநேர விசாரணை எதற்காக? விடுவித்த உடனே நிர்மல் குமார் பேசியது ஏன்?

பாஜக பாணியில் தான் தற்போது அரசு செயல்படுகிறது. (ED)யை வைத்து பாஜக அரசு அச்சுறுத்துவது போல் போலீசை வைத்த மிரட்டுகிறது தவெக.குற்றவாளிகள் நிரம்பியதாக அமைச்சராவை உள்ளது .

அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் சேர்ப்பது தான் மாற்றமா ? குற்றவாளிகள் நிரம்பிய அவையாக உள்ளது தவெகவின் அமைச்சரவை. மாற்றுக் கட்சி எம்எல்ஏக்களை சேர்ப்பதுதான் மாற்றமா? தவெக அரசின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானவையாக உள்ளது.

அரசு எப்படி இயங்குகிறது என்று முதலமைச்சர் விஜய்க்கு தெரியுமா ? தலைமைச் செயலகத்தில் யாரும் பணிபுரிவதில்லை. அடிப்படை புரிதல் இன்றி தவெக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அடிப்படை புரிதல் என்று குற்றம் சாட்டுவதா? சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது ஏற்கனவே நில மோசடி வழக்கு இருக்கிறது. அமைச்சர் மரியவில்சனுக்கு கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக மீது அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் . தவெகஅமைச்சர்களுக்கு பொதுவெளியில் எப்படி பேசுவது என்று கூட தெரியவில்லை .

ஏற்கனவே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கரூர் சம்பவம் உதயநிதிக்காக திமுக தலைவர் செய்த சதி எனப் பேசியதால் திமுகவினர் கடும் கோபத்துக்கு ஆளாகியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியான திமுகவின் சட்டத்துறை இனி தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரெட் ஜெயண்ட் விவகாரம்: ஆதவ் அர்ஜுனாவின் சவால் முறியடிக்கப்பட்டதா? பின்னணி என்ன?
பரந்தாமன்
logo
Kalki Online
kalkionline.com