

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏவாக உள்ளவர் கோவிந்தராஜன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த இவருடைய பதவி கடந்த ஆண்டு பறிக்கப்பட்டு, ரமேஷ்ராஜா என்ற மீஞ்சூர் ஒன்றிய செயலராக இருந்தவரிடம் வழங்கப்பட்டது. அது முதல் இருவரும் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
ஒருவர் பங்கேற்கும் நிகழ்ச்சியை மற்றொருவர் தவிர்ப்பதும், வெவ்வேறு நேரங்களில் வருவதுமாக இருந்தனர். இதனால் திமுகவினர் யார் பக்கம் செல்வது என தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் பெரியபாளையம் அடுத்த குமரப்பேட்டையில் நேற்று, கட்சி சார்பில் நடந்த கோலப்போட்டியில் எம்எல்ஏ கோவிந்தராஜன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜா கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் முனிவேல், எம்எல்ஏ கோவிந்தராஜனிடம் 'ஒன்றியத்தில் நடக்கும் கட்சி விழா குறித்து தனக்கு எதுவும் தெரிவிப்பதில்லை' எனக் கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. அவைத்தலைவர் முனிவேல், மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜாவின் ஆதரவாளர். கோபம் கொண்ட எம்எல்ஏ கோவிந்தராஜன் முனிவேல் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டார். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து முனிவேலின் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏ கோவிந்தராஜனை கண்டித்து திருநிலை கிராமத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் திமுக தலைமை இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வரும் சட்டசபை தேர்தலில் இதன் ரிசல்ட் எதிரொலிக்கும் என்றும் கோஷமிட்டனர். சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுகவில் நடைபெறும் இம்மாதிரியான கோஷ்டி மோதல்கள் கட்சியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.