நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசை எதிர்க்க திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்!

மாதிரி படம்
மாதிரி படம்

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடக்க இருக்கக்கூடிய நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் 9 ஆண்டு கால ஆட்சி தமிழ்நாடு மக்களை வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் குரல் எழுப்புவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல், டீசல், சமையல் விலை உயர்வைக் கண்டித்தும், தமிழ்நாட்டினுடைய ஜிஎஸ்டி பங்களிப்பை சரியான முறையில் ஒதுக்க வேண்டும். மணிப்பூர் கலவரம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற விஷயங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று கூட்டத்தில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தொடர்ந்து ஆளுநர்களின் அத்துமீறல் நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதாகவும், நடுநிலையான நபர்களையே மாநில ஆளுநராக நியமிக்க வேண்டும் என்ற சர்க்காரியா கமிஷனின் உத்தரவை மீறி பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் காரர்களை ஆளுநராக நியமிப்பதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்தும், சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மூலமாக மாநிலங்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருவதை கண்டித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 யில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் திமுக, மத்திய பாஜக அரசை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையாக எதிர்க்க முடிவெடுத்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com