பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு தி.மு.க. அஞ்சாது முதல்வர் ஸ்டாலின் அறிக்கை!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து அறிக்கை ஓன்றினை வெளியிட்டார் முதலவர் ஸ்டாலின் அதில் “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது” முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழி வாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்.

தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக்கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள்.

விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா?

என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்கு முறைகளை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்கிறார் மு.க ஸ்டாலின்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com