

‘அரசியலில் மாணவர்கள் தலையிடக்கூடாது’ என்று சென்னை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு திமுக மாணவர் அணி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை மாணவர்களுக்கு சுற்றறிக்கை என்று அனுப்பப்பட்டு உள்ளது. அந்த சுற்றறிக்கையில், ‘மாணவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்த இயக்கத்திலும் அமைப்புகளிலும் உறுப்பினராக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சென்னை பல்கலைக்கழகத்துக்கு எதிராக எந்தவித போராட்டத்திலும் ஈடுபட மாட்டேன் என்று தெரிவிக்க வேண்டும். இந்தச் சுற்றறிக்கையில் மாணவர்களும் பெற்றோர்களும் கையொப்பமிட வேண்டும்’ என்று கேட்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ‘இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் துறைத்தலைவர் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவரை கல்வி பெறும் வாய்ப்பிலிருந்து நீக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக மாணவர் அணி மாநிலச் செயலாளர் எழிலரசன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “அமைப்புகளில் மாணவர்கள் இணைந்தால் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கமா? இதை திமுக மாணவர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது. தொன்மையும், பாரம்பரியமும்மிக்க சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறை மாணவர்களிடமிருந்து, ‘எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்பட மாட்டேன், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபட மாட்டேன்’ என்ற உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு கேட்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவர் உடனே மாணவர்களை பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கிவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பல்கலைக்கழகங்கள், பாடங்களை மட்டும் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக் கூடங்களாக மட்டும் இல்லாமல் சமூக நடத்தை, சமூக பொறுப்பு, அரசியல் புரிதல், பொது அறிவு சார்ந்த கல்வி, அடிப்படை சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவைக்கான பயிற்சிப் பாசறையாகவும் விளங்கிட வேண்டும். இளம் வயதில் அடக்கப்படும் நியாயமான உணர்வுகள் பல்வேறு வடிவங்களில் பிற்காலங்களில் வெளிப்படலாம் என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்து. பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை, உரிமைகளைப் பற்றி நிர்வாகத்திடம் உரையாடவும், கருத்துகள் தெரிவிக்கவும் ஜனநாயக வழிமுறையை பின்பற்றி போராடிடவும் உரிமை கொண்டவர்கள் என உணர வழிவகுக்க வேண்டும். இச்சூழல் இல்லாமல், அடக்கப்பட்ட மனநிலையில், மறுக்கப்பட்ட உணர்வோடு வெளிவரும் இளம் தலைமுறையினரை பிற்காலங்களில் சமூகத்திடமோ அல்லது அரசிடமோ உரையாடி விவாதிக்கத் தெரியாதவர்களாக, ஜனநாயக முறைப்படி போராடத் தெரியாதவர்களாக, உரிமையற்றவர்களாய் இருந்திடச் செய்யும். இதனால் பிற்காலத்தில் அடக்கி வைக்கப்பட்ட எரிமலையின் குழம்பைப் போல, முறையற்ற போராட்ட கலவரங்கள் ஏற்படக் காரணமாக இளம் தலைமுறையினர் தள்ளப்படுகிறார்கள்.
பாஜக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மாணவர்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் சூழ்ச்சியை பல்வேறு வகையில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்கள் பின்பற்றி வருகின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றிருந்தும், மாணவர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து எந்தப் போராட்டமும் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையை கொண்டும், குண்டர்களை கொண்டும் தாக்குதல்கள் நடைபெறுவதை நாடறியும். இத்தகைய போக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் இதுநாள் வரையில் இருந்தது இல்லை. ஆனால், தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர் பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிடத் தொடங்கி, தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை, மொழிக் கொள்கை, சமூக நீதி கொள்கைக்கும் எதிராகச் செயல்பட்டு கொண்டிருக்கிறார்” என்று குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், “இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் எந்த உறுதிமொழியையும் மாணவர்களிடமிருந்து பல்கலைக்கழகங்கள் பெற முற்படக்கூடாது என்று திமுக மாணவர் அணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.