

தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஆகஸ்ட் 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை ஒருவர் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
“ஜூன் மாதம் முடிந்துவிட்டது, ஜூலை மாதமும் முடிந்துவிட்டது, இப்போது ஆகஸ்ட் மாதத்தில் இருக்கிறோம்; ஆனால் இன்னமும் தண்ணீர் வரவில்லை. இன்று வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இதைப் பற்றி இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் வாய் திறந்து பேசுகிறாரா என்றால் இல்லை. அவருக்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என பேசியிருந்தார்.
இதையடுத்து முதல்வர் விஜய்யை, உதயநிதி ஸ்டாலின் இழிவாக பேசியதாக அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் தவெகவினர் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் அவதூறாகப் பேசியது தொடர்பாக தவெக சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் புகார் மனு அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உதயநிதி வீட்டுக்குள் சென்ற போலீசார், அவரை கைது செய்வதாக தெரிவித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி அளித்த புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி அமர்வில் அவரது வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்தனர். இதனை தலைமை நீதிபதி தர்மாதிகாரி ஏற்றுக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து நீதிபதி இளந்திரையன் முன்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னா மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இளந்திரையன், பிற்பகலில் இந்த மனு மீது விசாரணை நடைபெறும்; அதுவரை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார்.அதேநேரத்தில் உதயநிதி வீட்டுக்குள் இருந்த போலீசார் தங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என கூறி உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.
கைதுக்கு பின் உதயநிதி பேட்டி :
"எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில், "என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி கட், காப்பி, பேஸ்ட் (Cut Copy Paste) செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர். அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன். விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே இவ்விவகாரத்தை த.வெ.க. அரசு கையில் எடுத்துள்ளது... விவசாயிகளை அரசு எப்படி ஏமாற்றுகிறது; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பேசினேன் பேசாத ஒன்றை பேசியதாக கூறி பொய் பரப்புரையை மேற்கொண்டு என் மீது நடவடிக்கை" என்று அவர் கூறியுள்ளார்.
திசை திருப்பும் நடவடிக்கையில் மட்டுமே இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது. முக்கிய பிரச்சனை வரும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றும் கூறினார்.