"விளையாட்டு வினையானது" என்று பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். அதாவது நாம் விளையாட்டாக செய்யும் சில விஷயங்களே பல சமயங்களில் நம்மை விபரீதத்தில் சிக்கவைத்துவிடும். அப்படிதான் விளையாட்டாக செய்த ஒரு செயல் ஒரு குடும்பத்தின் நிம்மதியை முற்றிலுமாக கெடுத்துவிட்டது.
அதாவது இந்த நிகழ்வு ரெட்டிட் என்ற இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த தளத்தில் பலரும் தங்களுக்கு நேர்ந்த மறக்க முடியாத சம்பவங்களை அடையாளங்களை வெளிப்படுத்தாமல் பதிவிடுவார்கள். அப்படி பதிவிட்ட பதிவு ஒன்று பலர் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐரோப்பாவை சேர்ந்த ஒரு பெண் தனது நண்பர் ஒருவருக்கு DNA சோதனை செய்யும் சாதனம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதை வைத்துக்கொண்டு அந்த நபர் சும்மா இல்லாமல் தனது சகோதர சகோதரிகளுடன் விளையாட்டாக டிஎன்ஏ பரிசோதனை செய்து பார்க்கலாம் என ஆசைப்பட்டுள்ளார். இதனால் தங்களின் பாரம்பரியம் பற்றி தெரிந்து கொள்ள முடியும் என அவர்கள் அந்த DNA பரிசோதிக்கும் கருவியை வைத்து சோதனை செய்துள்ளனர்.
ஆனால் இந்த சோதனை முடிவில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கும் என யாருக்கும் தெரியவில்லை. அந்த சோதனையில் அவரது சகோதரர் மற்றும் சகோதரிக்கு டிஎன்ஏ ஒன்றாக இருந்துள்ளது. ஆனால் இவரது டிஎன்ஏ அவர்களுடன் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அதாவது இவரின் சகோதர சகோதரியின் தந்தை ஒருவர்தான். ஆனால் இவ்வளவு நாள் தனது தந்தை என நினைத்து வந்த நபர் இவரின் நிஜ தந்தை இல்லை எனத் தெரிந்ததும் பரிசோதனை செய்த நபர் அதிர்ச்சியடைந்தார்.
அந்த சமயத்தில் பரிசோதனை செய்த கருவியில் ஏதாவது பிரச்சனை இருக்கும் என அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து தன் தாய் தந்தையுடன் பேசியபோது, முதலில் அதெல்லாம் ஒன்றும் இல்லை என அவர்கள் மறுத்துள்ளனர். தந்தையோ இவர் கூறியதைக் கேட்டவுடன் மிகவும் மனவருத்தம் அடைந்துள்ளார். பின்னர் நீ எனக்கு பிறக்கவில்லை என்று உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இருப்பினும் நீ எங்களுடைய சொந்த மகன் தான் என உருக்கமாக கூறியுள்ளார்.
இதனால் அந்த நபர் மனம் உடைந்து போனதாகவும், இதுகுறித்து தன் தாயார் பலமுறை விளக்கம் கொடுக்க முயன்ற போதும் இவர் அதைக் கேட்க தயாராக இல்லை என பதிவிட்டுள்ளார். இவ்வளவு பெரிய விஷயத்தை அவர்கள் இத்தனை ஆண்டு காலம் மறைத்ததை எண்ணி மனமுடைந்ததாக பதிவு செய்துள்ளார் அந்த நபர். இப்படிதான் விளையாட்டாக செய்த ஒரு செயல் தற்போது அந்த குடும்பத்தின் நிம்மதியை முற்றிலுமாக கிடைத்துவிட்டது.