கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் சாதி பாகுபாடு கட்டப்படுவதாக அவ்வப்போது புகார் எழுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பிட்ட சாதியினரை உயர் சாதியினர் சிலர் கோவிலுக்குள் விட மறுப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலர் குரல் கொடுத்ததும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.
இந்த பிரச்னைகள் தொடர்வதால் ராஜபாளையத்தைச் சார்ந்த மேடையாண்டி என்பவர், இது குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், அருள்மிகு மாதரசி அம்மன் கோயில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோயில்கள் உள்ளன. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனை குலதெய்வ கோயிலாகக் கொண்டுள்ள மக்கள் வழிவழியாக வழிபட்டு வருகின்றோம்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அந்த பகுதியில் வசிக்கக்கூடிய உயர் சாதியினர் சிலர் இந்த கோயிலில் எங்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இந்த கோயில் உயர் சாதியினருக்கு சொந்தமான கோயில் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்த கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும்.
எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு பூஜைசெய்து வழிபாடு செய்ய எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம்
மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பட்டியல் வகுப்பைச் சார்ந்த எங்களை கோயிலில் வழிபட அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என
கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “கோயில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது. அனைவரையும் சமமாக ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் என குறிப்பிட்டு, அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் வழிபாடு நடத்துவதை
மாவட்ட நிர்வாகம், காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தார்.