எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா!

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா!
Published on

ன்னதான் காவல்துறையும் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தாலும் வங்கியிலிருந்து பணத்தை அபகரிப்பதில் கில்லாடிகளாக இருக்கும் சைபர்கிரைம் ஆசாமிகளின் புதிய மோசடி எடப்பாடியில் அரங்கேறியுள்ளது. எச்சரிக்கையாக இருந்ததால் அரசு அலுவலரின் பணம் பத்திரமானது. இதோ அதைப்பற்றிய தகவல்.  

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவரும் தர்மபுரி மாவட்டம் அருகில் உள்ள அரூரில் பணிபுரிபவருமான பொதுத்துறை அலுவலர் ஒருவருக்கு தபால் மூலமாக ஒரு புதிய ஏடிஎம் கார்டு வந்தது. அதை வாங்கிப் பிரித்து பார்த்தவருக்கு சில மணி நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பும் வருகிறது. அதில் அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர்  தற்போது அதிக அளவில் சைபர் கிரைம் குற்றங்கள் நடப்பதாகவும் இதை தடுக்கும் வகையில் வங்கியில் அதிக பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய ஏடிஎம் கார்டு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றும், ஏற்கனவே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் வைத்துள்ள செயல்பாட்டில் இருக்கும் ஏடிஎம் கார்டு வருகிற 31ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிடும் என்றும் கூறியுள்ளார்.

அந்த நபர் கூறிய கருத்துக்களில் ஏதோ சந்தேகம் இருப்பதாக கருதிய பொது துறை அலுவலர் சில நிமிடங்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்.  அந்த நேரத்தில் அந்த மர்ம நபர் பொதுத்துறை அலுவலரின் பெயர், முகவரி, வங்கிக் கணக்கு எண், ஐ எப் எஸ் சி கோடு எண்  போன்ற அனைத்து விபரங்களையும் மிகச் சரியாக கூறியுள்ளார். மேலும் தற்போது உங்களது செல்போனிற்கு ஒரு ஓ.டி.பி எண் வரும் அதை நீங்கள் சரியாக கூறும் நிலையில் உடனடியாக உங்கள் புதிய ஏடிஎம் கார்டு பயன்பாட்டிற்கு வரும் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

இருப்பினும் மறுமுனையில் பேசிய நபர் மீது சந்தேகம் தீராமல் எச்சரிக்கையான பொதுத்துறை அலுவலர் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு சென்று இந்த விபரங்களைக் கூறி புதிதாக வந்த ஏடிஎம் கார்டை காண்பித்து விளக்கம் கேட்டார்.  அப்போது அந்த கார்டு மற்றும் கடிதம் போலியானவை என்பது தெரிய வந்தது. மேலும், இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் ஓ.டி.பி எண்ணைக் கூறும் பட்சத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து சேமிப்பு தொகை முழுவதையும் அவர்களால் அபகரிக்கக் கூடும் என்று அதிர்ச்சி தகவலை வங்கி அதிகாரிகள் அவருக்குத் தெரிவித்தனர்.

இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும் எனவும் வங்கிகள் எந்த நிலையிலும் தொலைபேசி வழியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்கு குறித்த எந்த விபரங்களையும் கேட்பதில்லை எனவும், இது குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் செயல்படுமாறும் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். இது போன்ற சைபர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் இடத்தில் கொங்கணாபுரம் பகுதி காவலர்கள்  சார்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களை சந்தித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோசடி கும்பல்கள் பல, பல்வேறு புதிய நூதனமான வகையில் இந்த சம்பவம் போல்  செயல்பட்டு மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பெருமளவிலான தொகையை நாள்தோறும் அபகரித்து வருவது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்தாலும், நாம் அந்த அலுவலர் போல எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே இது போன்ற சைபர்கிரைம் மோசடிகளில் இருந்து தப்பலாம் என்பதே காவல்துறையின் வலியுறுத்தல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com