
நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரிப்பால் நகை என்பதை எட்டி பார்க்க கூட முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 2035 ஆம் ஆண்டு தங்கம் விலை என்னவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று நகை தான். முந்தைய காலம் முதலே தங்கத்திற்கு மதிப்பு அதிகம். அதனால் தான் வரதட்சணையாக தங்க நகை கொடுக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் மதுக்கடைகளுக்கு அடுத்தப்படியாக நகைகடைகளில் தான் கூட்டம் கூடுகிறது என்று சொல்வோரும் உண்டு. அப்படி தங்கத்தின் மீதான ஈர்ப்பு யாரைத்தான் விட்டு வைத்தது. மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் இந்த பொக்கிஷம் மேலும் பெரிய பொக்கிஷமாகதான் மாறி வருகிறது. மதிப்பு குறைந்த பாடே இல்லை. எப்படியாவது தங்கம் வாங்கிவிடலாம் விலை அதிகரிப்பதற்குள் என்று மக்கள் நினைக்கும் நேரத்தில் அதை விட எட்டாக்கனியாக மாறிவிடுகிறது தங்கத்தின் விலை. இதனால் நகை வாங்கமுடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
அன்றைய காலத்தில் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பல சவரன் வாங்கிய பெண்களுக்கோ தற்போது ஜாக்பாட் தான். ஏனென்றால் அன்றைய காலத்து நகைகளை இன்றைக்கு விற்றால் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம். அந்த அளவிற்கு நகையின் விலை உச்சம் தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.75 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. அந்த அளவுக்கு அதன் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் விலையோ ரூ.10 ஆயிரத்தை நெருங்கி வருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இப்படியே போனால் என்னதான் ஆகும் என்று மக்கள் குமுறி வருகின்றனர்.
பொருளாதாரம் மற்றும் சந்தை உலகில் ராபர்ட் கியோசாகி என்பவர் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். 'ரிச் டாட் பூர் டாட்' (Rich Dad Poor Dad) என்ற புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் மீண்டும் ஒருமுறை தங்கத்தின் விலை குறித்து ஒரு பெரிய கூற்றை முன்வைத்துள்ளார். சமூக ஊடக தளமான X இல் ஒரு பதிவில், தற்போதைய பொருளாதார நிலைமை அமெரிக்காவை ஒரு பெரிய மந்தநிலையை நோக்கித் தள்ளுகிறது. ஆனால் இந்த நெருக்கடி ஒரு பெரிய வாய்ப்பாகவும் இருக்கலாம் என்று அவர் கூறினார்.
மேலும், 2035ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் விலை $30,000ஐ (சுமார் ரூ.25 லட்சம்) தாண்டும் என்று கியோசாகி கூறுகிறார். அதேபோல், வெள்ளி மற்றும் பிட்காயின் வாங்குவதை அவர் வலியுறுத்தியுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.