உங்க பழைய வங்கி கணக்குகளில் நீங்கள் மறந்து போன பணம் இருக்கிறதா..? பெறுவது எப்படி?
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் வைப்புத்தொகைகளை நிர்வகிக்க புதிய இணையதளத்தை தொடங்கவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்ததுள்ளது.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒரு கணக்கிலிருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், அந்த கணக்கு செயலற்றதாகிவிடும் (Inactive). அதாவது வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ, செலுத்தாமலோ இருந்தால் அந்த கணக்கை செயல்பாடு இல்லாத கணக்கு என வங்கி கருதுகிறது.
உங்கள் வங்கியில் இயக்கப்படாத கணக்குகளில் (2 ஆண்டுகளுக்குள் மேலாக மற்றும் 10 ஆண்டுகள் வரை செயல்படாத கணக்குகளில்) மற்றும் பணம் கோரப்படாத டெபாசிட்கள் (10 ஆண்டுகளுக்கு மேல்) உள்ள தொகை ஆர்பிஐ-யின் டிஇஏ-பண்ட்க்கு மாற்றப்படுகிறது. நீங்களோ அல்லது உங்கள் சட்டப்பூர்வ வாரிசுகளோ, எந்த நேரத்திலும் அந்த பணத்தை கோரி பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
உங்கள் பணத்தை பெற செய்ய வேண்டிய மூன்று எளிய வழிகள் :
1. உங்கள் வழக்கமான வங்கி கிளை மட்டுமின்றி, எந்த வங்கி கிளைக்கும் நீங்கள் வரலாம்.
2. வங்கியில் கேஓய்சி ஆவணங்களை (ஆதார், பாஸ்போர்ட், வோட்டர் ஐடி அல்லது டிரைவிங் லைசென்ஸ்) சமர்ப்பியுங்கள்.
3. அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பிறகு உங்கள் பணத்தை வட்டியுடன் பெறுங்கள்.
இந்த மாதம் (அக்டோபர்) முதல் வரும் டிசம்பர் வரை நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் கோரப்படாத சொத்துக்கள் பற்றிய சிறப்பு முகாம்களுக்கு வாருங்கள். அங்கு வந்து உங்களுக்கு தேவையான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் கோரப்படாத டெபாசிட்டுகளை பற்றி அறிந்து கொள்ள...
உங்களின் பழைய கணக்குகள் உள்ள உங்கள் வங்கியின் இணையதளத்தில் அல்லது ஆர்பிஐயின் UDGAM இணையதளத்தில் (htts://udgam.rbi.org.in) தேடுங்கள். இதில் தற்போது 30 வங்கிகள் உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு http://rbikehtahai.rbi.org.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்துக்களை rbikehtahai@rbi.org.in என்ற இணையதள முகவரியில் எழுதுங்கள்.
உங்களுக்கு தேவையான விவரங்களை 9999041935 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.